Friday 6 January 2012

நிழலைத் தேடும் நிஜங்கள்..

நளினவேடந்தரித்து
நடக்கும் அத்தனையும்
நிஜமென்று நம்பி
நடக்கும் மனமே!

நிழல்கூட நம்கூடவரும்போது
நிஜமாகிறது
நிழலாய் நடப்பதை
நிஜங்களென நினைக்கவைத்து

நிழலை நிஜமென நினைத்து
நிஜத்தை இழந்துவிடும் நெஞ்சமே!
நிஜங்கள்கூட நிஜங்களல்ல
நிலையற்ற இவ்வுலகில்

நிஜமான நட்பு
நீங்கும் பிரிவாக
கண்காணும்போதே
கானல் நீராகி

நிஜமான காதல்
நிழலென்ற கருப்பாக
நினைவிருக்கும்போதே
நீங்கிய வெறுமையாகி

நிஜமான பாசம்
நிலையற்ற நேசமாக
நிலையில்லா உலகைப்போல்
நிலை தடுமாறி

நிஜமான அத்தனையும்
நிழலாகிப் போகிறது
நிலையற்ற அத்தனையும்
நிஜமாக ஆகிறது

நிழலும் நிஜமும்
நிலையற்றுவிட்டதால்
நிலையான ஒன்றைதேடி
நிதமும் அலையும் மனம்

நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
நிழலுக்கு அலைகிறதே!
நிலையற்ற மனம்....

தென்றலைத் தூதுவிட்டேன்.

அன்புத் தோழியே!
அடிக்கடி சொல்வாயே
காற்றைப்போல் நாமென்று

இதோ கடல்கடந்து வந்தபின்பு
உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்
பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்தோள்களை உரசும்போது-
என்தோளில் நீ
சாய்வதுபோல் உணர்கிறேன்

குளிர்காற்று என்கைகளுக்குள்
குளிரூட்டும்போது - நீ
என்கைகோர்த்து நடக்கிறாய்
என்றெண்ணி கைகளை
இயல்பாகவே இறுக்குகிறேன்

அனல்காற்று அடிக்கும்போது -நீ
என்மேல் கொஞ்சம்
கோபம் படுகிறாயென
கொஞ்சும் கோபமாக
நானும் முகத்தை திருப்புகிறேன்

துள்ளித் திரிந்த நாள்களில் நாம்
செய்த குறும்புகள் அத்தனையும்
அடிநெஞ்சிற்குள் நங்கூரம் இட்டதடி
செய்யாத செயலுக்கு
அடிகள் வாங்கியதும் நினைவினில் அடிக்கடி

புத்தம் புதிதாக
புதுத்துணி அணியும்போதெல்லாம்
புதுவருடமடி நமக்கென்று
பூத்து சிரித்த நியாபகங்கள்
பூவாக நெஞ்சுக்குள்ளே பூக்குதடி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த காலத்தை
அசைபோட்டுக்கொண்டே
அயல்நாட்டில் வசிக்கிறேன்

ஆன்மாவிற்குள்
ஆனந்தம் அலைபாயும்போது
அடிதோழியே! -நீ
அருகே இருக்கவேண்டுமென்று
அடித்துகொள்ளும் நெஞ்சத்திற்கு
ஆறுதலும் சொல்கிறேன்

எது எப்படியோ உனைத்தேடி
தென்றல்வழி நான் வருவேன்-அது
உனைத் தழுவும்போது
தெளிவாய் நீ உணர்வாய் எனை

காலங்கள் கடந்தபோதும்
மரணங்கள் நிகழ்ந்தபோதும்
பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்
காற்றை சுவாசிக்கும் காலம்வரை
நாமிருப்போம்
நம்முள் கலந்திந்திருப்போம்
நட்பில் இணைந்திருப்போம்..

புதையவா! பூக்கவா!

காதலென்னும் கீதை –அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..