Sunday 31 March 2013

நீ.. நீ.. நீயேதான்?


எனக்குள்ளும் நீ...
என் இதயத்தினுள்ளும் நீ...
நாளின் உதயத்திலும் நீ....
எண்ணங்களிலும் நீ...
எழுதிய வண்ணங்களிலும் நீ....
சிலிர்க்கும் சிந்தையிலும் நீ....
சின்னச்சின்ன கவிதையிலும் நீ...
சிந்திய கண்ணீரிலும் நீ...
தடவிய மருந்திலும் நீ...
அதிரும் உதிரத்திலும் நீ....
உலவிடும் உயிர்த்துடிப்பிலும் நீ....
சிங்காரச் சிரிப்பிலும் நீ...
கக்கிய கோபத்திலும் நீ....
மன ஆழத்திலும் நீ...
ஆழ்மனத்திலும் நீ.....
மயங்கின விழியிலும் நீ...
விழித்திரை முழுவதிலும் நீ...
காணும் காட்சியிலும் நீ...
காட்சிக் கலைப்பிலும் நீ....
கனிவான கனவிலும் நீ...
கனவுக்குள் காதலனாயும் நீ....
முழுமைக்கும் நீ.. நீ.. நீயேதான்?

பின்னெப்படி மறைத்து
பாவனை காட்டிட!
என் முகத்தின் சுருக்கத்தினை
அரிந்து, அறிந்தவன் நீ....

Friday 29 March 2013

உடலும் உள்ளமும்.....


உயிரின் இறுதி அணு வரை
ஓய்வெடுக்கத் துடிக்கும்
இரவின் ஆளுமையில்....

தேவையில்லா சுமைகளைச்
சுமந்துநிற்கும்
உடலும் உள்ளமும் ஓய்வு ஓய்வு
என்று புலம்பும் நிலை.....

இரவின் பிடியில் சிக்கித் தவிக்கும்
படபடக்கும் தீயெனக் கண்கள்....
அங்கே நீநீ என்று திரும்பத்திரும்ப
உரைத்திடும் மனம்....

ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல்
நடந்த அனைத்து சம்பவமும்
கண் முன்னால் அனகோண்டா
ஆட்டம் போடுவது போல
ஆட்டம் போட....

மேல் இமை கீழ் இமைக்கு
சொந்தமில்லை..........

தூங்கினால் கனவு வரும்
தூக்கத்திற்கு வழி இல்லை.......
பகற்கனவிலோ உன்னின்
ஆக்கிரமிப்பு, ஆணவத் தொல்லை....

எந்த பாவமும் அறியவில்லை....
ஆனால் தூக்கமில்லாத நிலை ஏன்?
தொண்டையில் சிக்கின முள்ளாய்.....

தூக்கமும் வரம்தான்...
அதற்கும் தவம் செய்திருக்க வேண்டுமோ?....
மடிசேரத்துடித்து மடிந்துநான்....

வாசனை நிறைந்த உன்...


மனம் மயக்கும் சிறு தூறல்...
கொஞ்சம் குளிர் தரும்
மெல்லிய தென்றல்....

கண்ணுக்கும் சிந்தைக்கும்
இனிமையாய் மல்லிகை கொடி....

எண்ணத்தில் இனிமை கூட்ட
சுவரில்
இளம் நீல வண்ணம்.....

இத்துடன்
பால்கனியில் வட்ட வடிவ மேஜையில்
ஏலக்காய் போட்ட தேநீர் கோப்பையுடன்
வாசனை நிறைந்த
உன் அருகாமை...

உன்வாசம் பருகினபடி
உயிரினுள் கலக்கமுயலும்
என்னினிய வாசம்,
உந்தன் மடியினில் குழந்தையாய்...

எண்ணங்களிலொரு தேன்மழை,
இதயத்திலொரு பூமழை,
மூளைக்குள்ளொரு கிறக்கம்,
முந்தானையினுள் ஒரு காதல்,
இதுஎன்ன....

மாலை நேரத்தின் சந்தோஷமா?
அல்லது
சந்தோஷத்துடன் மாலை நேரம் வந்ததா?

Monday 25 March 2013

அருகினில் வந்தால் இல்லைஎன்கிறாய்


உச்சந்தலையில் ஓர் துளி,
உதட்டோரம் மறு துளி,
இனிமையான மழைத்தூரல்தான்,
நனைந்திடத் துடிக்குது மனம்.

ஊர் கடைசியில் ஒலிபெருக்கி,
உன் தலைமுடி உதிர்வைதைப் பாடிடும் ,
ஒலிமழையின் அலைகள்தான்,
மூழ்கிடத் துடிக்கும் மனம்.

வேரில் தேனைத் தேக்கி,
மரத்தலையில் குடியிருக்கும்,
மணம் மயக்கும் மலர்க்கூட்டம்தான்,
மஞ்சத்தினில் துயிலத்துடிக்கும் மனம்.

உன் கடைக்கண் வீச்சினில் சிக்கி,
அது தந்த மொழியினில் கிறங்கி,
இடையின் நடையில் மயங்கித்தான்,
தயங்கித்தான், கரம்பிடிக்கத் துடிக்கிறது.

உயிர்கொண்டு தழுவிடக் கேட்டால்
ச்சும்மா விளையாட்டுக்கு என்கிறாய்.
காதலொரு இருட்டுத்தான் உனக்கு!
கண்கேட்டபின்பே சூரிய உதயம்.

Friday 22 March 2013

நினைவில் ஒட்டிய அந்த சிவப்பு


அவளை நேரில் சந்திக்கும் வேளையில் எல்லாம் சிரிப்பினில் அன்பைக் கலந்து ஆராதிப்பாள். கண்களில் காதலைக் கலந்து ஒளி வீசுவாள். பேசிடும் மொழியில் சந்தேகமே இல்லாமல் சிதைப்பாள். அந்த அலங்கரிப்பில் ஆடிடும் அந்த அங்கத்தினை கவனிக்கத் தவறிடுவாள். நம்மையும் தவற வைப்பாள். திகைத்துத் திரும்புகையில் பறந்திருப்பாள். வலையினில் நம்மின் பக்கத்தினுள் வந்துவந்து மேய்வாள். அவள் இவளா. இவள் அவள்தானா. குழப்புவதில் ராசாத்திதான். ஆனாலும் அவள்தான் என்று அறுதியிட முடியாது. அவள் நமக்குள் வந்து ரசிக்கிறாள் என்பதினை உணரமுடியும். நேரில் காணும்பொழுதும் அடிக் கோடிட்டுப் பேசிடுவாள். ஆனாலும் சுவடுகண்டு நீயாஎனில், இல்லையே என்பாள். கதை சொல்லும் வேளை, கவிதை புனையும் சோலை, சுவையாய் நகை புரியும் சொல்லில், நம்மின் நடவடிக்கைகளில் ஒட்டி உறாவாடுதலில் கலந்துதான் இருப்பாள். தொட முயல்கையில் தூர ஓடியிருப்பாள். வந்திநிற்பதேனில் சொல்லியடிக்கலாம் வரவே மாட்டாள் என்பதினை. புகைப்படம் எனில் நான் இக்கடைசிஎனில், அவள் அக்கடைசி. ஆனால் அருகினில் நின்று அன்பு செய்தலே பிடித்திடும் அவளுக்கு. பளிச்சென ஒரு சந்தர்ப்பம், தவிரவிட்டால் தலைதிருப்பி ஒரு ஓட்டம். இன்னும் முடியாமல் ஓடிக்கொண்டுதான் வாழ்க்கை.
அன்று ஒருமுறை ஒரு ஓரத்தில் உரைத்த சிகப்பை சேலையில் தடவிக் கொண்டுவந்துவிட்டாள்.
விழுந்தது விழுந்ததுதான், எழவே முடியவில்லை.
நனையும் அவள் அன்பினிலிருந்து மீளவும் முடியாமல். உரசும் அவள் காதலிலிருந்து மாளவும் தெரியாமல், தெவிட்டாமல் திணறித்தான் தித்திக்கிறேன்.

Sunday 17 March 2013

தவறிய பாதையும், வழிகாட்டியும்


அது இலங்கையின் ஒரு மலைப்பகுதி. அவன் அந்தப்பகுதியின் தேயிலைத் தோட்டங்களுக்கு தேவையான தொழில் குத்தகைகளை எடுத்து, மிகவும் தெளிவாக அவைகளை செய்து முடித்துக்கொடுத்து அந்த முதலாளிகளிடம் நல்லபெயர் எடுத்து வைத்திருந்தான். நல்லவன். தமிழன். என்ன வேலையெனினும் அவனையே அழைப்பார்கள். அவனின்கீழ் நூரு நன்கு உழைக்கும் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். அவன் அழைத்த குரலுக்கு செவி சாய்ப்பார்கள். அவனும் அவர்கள் அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து, கவனித்துக் கொண்டான். வீடு பங்களா என்று ராஜவாழ்வு வாழ்ந்திருந்தான். அவனுக்கு ஒரேயொரு பெண்குழந்தை இருந்தாள்.
ஈழப்போர் தீவிரமடைந்த பொழுது அது. தன் சொந்தங்கள் வடக்கில் வாழ்ந்ததால் அவர்களைக் காண ஒருமுறை வடக்கு சென்றிருந்தான். அங்கு போரின் தீவிரத்தில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் மொத்தமாய் குழம்பி ஊர்திரும்பினான். அந்த காட்டுப்பகுதியில் மற்றெப்பொழுதும் இல்லாத வகையில் இப்பொழுது மரியாதை இல்லாமல் போனது, அதற்கு புலிகளின் தற்கொலைப் படைகள் ஏற்படுத்தியிருந்த கொலைபயம். கொஞ்சம்கொஞ்சமாக அந்தப்பகுதியின் மக்கள், தமிழர்களை நம்புவது குறையத் துவங்கியது. புலிகளும் தங்களின் போட்டிக் குழுவினர்களையும் நல்ல தமிழ் தலைவர்களையும் கொன்றுகுவித்தனர்.
அவனுக்கு இப்பொழுது யாரையும் நம்பமுடியாதனிலை, மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. எங்கு தவறு இருக்கிறது என்பதினை பிரித்துணர முடியாமல் ஆகிவிட்டது. புலிகளின் போர் நன்மை தரக்கூடியதா? இல்லையா? இவற்றின் முடிவுதான் என்ன? பயமாக இருந்தது. ஒன்றுமட்டும் தீர்மானமாகப் புரிந்திருந்தது, அவர்களுக்கு. இந்தப்போர் ஒருபயனையும் தமிழர்களுக்குத் தந்துவிடப்போவதில்லை என்பதே அது. நெருக்கடி முற்றியதும் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, தன்னோடு உதவியாக வரத் தயாராக இருந்த சில மக்களோடு ஒரு நாட்டுப்படகில் கிளம்பி ராமேஸ்வரம் வந்தடைந்தனர். இங்கு அவர்களுக்கு நல்ல மறியாதை இருக்கும் என்று நம்பித்தான் இங்கு தமிழகம் வந்தனர்.
அவனின் வாழ்க்கையில் இந்த அளவுக்கு மோசமாக சிங்களர்கள் கூட அவனை கேவலமாக நடத்தினதில்லை. ஆனால் தமிழகத்தில் நடந்தவைகள் அனைத்தும் மறக்கப்படவேண்டியவை. அவனுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்தது ஒரு சிறு குடிசை. கிடைத்த உணவு, இலங்கையில் இருந்தபொழுது அவனின் நாய்களுக்கு அவன் போடும் உணவுதான் அது. செய்திடக்கூடாத பெரிய தவறு தம் மக்கட்கு செய்துவிட்டதாய் நினைத்துனினைத்து வருந்தினான். மேலும் அவர்கள் வெளியிலும் செல்லமுடியாது. முழுனாளும் அந்தக் குடிசையினுள்தான். அந்து சிறிய வட்டத்தினுள்தான் இருந்துகொண்டு, எல்லாமும்.
அந்த ஊரின் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், கண்ணில் கண்ட அனைவரிடமும் பேசிப்பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வருடம் இப்படியாக உருண்டு ஓடியது. பின் யாரும் அவர்களைக் கண்டுகொள்ளாத நிலை வந்தபின், அவன் யோசித்தான். சக நண்பர்களுடன் கலந்தாலோசித்தான். முடிவு செய்தார்கள், கூரை வேயும் குத்தகைகளை எடுத்து செய்யலாம் என்று. பெரிய ஊர்களுக்கெல்லாம் அலைந்து திரிந்து வேலை செய்தார்கள். வேலை தெளிவாகவும், சுத்தமாகவும், விரைவாகவும், குறைந்த செலவாகவும் இருந்ததால் தமிழக மக்களிடம் “இலங்கை அகதிகள், கூரைகள்” (இங்கும் அகதிகள்தான்) என்ற நல்ல பெயரினைப் பெற்றது. நல்ல வருமானமும் பெற்றுத் தந்தது. நல்ல பணமும் கிடைத்தது. எல்லொருக்கும் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த திருப்தி கிடைத்தது. இப்பொழுது அவர்களின் வாழ்க்கைக்கு எந்தவகையிலும் பயமில்லை. தங்களின் குழந்தைகளையும் சிறந்த பள்ளிகளில் படிக்கவைக்க முடிந்தது.
இலங்கையில் நடக்கும் அன்றாட போர் நடவடிக்கைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு தமிழ் தலைவர்களும் கொல்லப்பட்டது, சிங்கள தலைவர்கள் சிதைக்கப்பட்டது. புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டது, பாரதப் பிரதமர் கொல்லப்பட்டது, அதனால் தங்களுக்கு இந்திய அரசினால் ஏற்பட்ட நம்பிக்கையற்ற நிகழ்வுகள், எல்லாமும் கடந்தாயிற்று. வருடங்கள் 20 ஓடியாகிவிட்டன. புலிகள் தலைவர் கொல்லப்பட்டார். சிங்களவெறிகளும் அடங்கிவிட்டது. இப்பொழுதும் ஞாயம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனியீழம் பற்றியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் கஷ்ட சூழ்னிலையில் வதங்கிக்கொண்டு அகதியாய், கைதிகளாய் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மக்களை என்ன செய்யப்போகிறார்கள்.
அடைந்த வெற்றியென்னவெனில் கேள்விக்குறி மட்டுமேதான் இன்றும்.....

Wednesday 13 March 2013

ஒரு தீவிரவாதம், உருவாக்கம்


ஒரு தங்கை, அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தம்பிக்கு படிக்க மெடிக்கல் சீட் கிடைத்திருக்கிறது, அவனை நன்றாகப் படிக்க வைத்திட வேண்டும். நம்மால்தான் படிக்கமுடியாமல் போய்விட்டது, அவர்களாவது சிறப்பாக வாழ்ந்திட வழிசெய்திட வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு பூர்வீகமாய் பாத்தியப்பட்ட அந்த 20 செண்ட் நிலம். அது ஒன்றே அத்தனைக்கும் ஆதாரம். நான்குவழிச் சாலையின் உபயம். வாஜ்பாய் வாழ்க. அதன் தற்போதய விலை, 20 லட்சம். ஆனால் அவனின் கையில் காலனா கிடையாது. இதுதான் அவனின் நிலை. சிறுவயதிலேயே பெற்றொர் இறந்துவிட்டதால், அவன் வாழ்வு மிகவும் கடினமாகிப் போய்விட்டது.
யாரோ ஒருவர் அமெரிக்காவில் பெரிய இஞ்சினியராம், அந்த இடத்தைக் கேட்டுவந்தார். ஒருமாதிரியாகப் பேசி மொத்தம் 19.5 லட்சத்திற்கு முடிவாகியது. 15 நாட்கள் மட்டுமே கெடு. அவரும் அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பிட வேண்டியதிருந்தது. ஒரே கண்டிஷன், அது ஜாய்ண்ட் பட்டாவில் இருப்பதால் தனிப்பட்டா பிரித்து வாங்கித்தர வேண்டுமாம். தனிப்பட்டா ஒன்றும் கஷ்டமில்லை என்று நினைத்ததுதான் தவறாகிப்போனது. தாசில்தார் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தார். அவனும் தினமும் அலைந்துகொண்டுதான் இருந்தேன். எல்லாமும் சரியாகவே இருந்தது ஆனாலும் தாசில்தார் ஏன் இப்படி அலையவிடுகிறார் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் முண்டிக் கேட்டபொழுது கிராம அதிகாரி சொன்னார், கையெழுத்துப்போட தாசில்தார் பணம் கேட்கிறார். பொதுவாக இதுபோன்ற இடத்துக்கு 2 லட்சம் வாங்குவார், நாந்தான் குறைத்துப்பேசி 1 3/4 க்கு சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்றும், பணம் கைமாறியதும் வேலை முடிந்திடும் என்றார். அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவனால் அவ்வளவு பணம் கொடுக்கவும் முடியாது. மனமுமில்லை. வாக்குவாதம் ஆகிப்போனதால், ஏறுக்குமாறான காரணங்களைக் கூறி வேலைமுடியாமல் ஆக்கிவிட்டார், தாசிதார். இடமும் சொன்ன நாளில் முடிக்கமுடியாததால் எல்லாமும் தடையாகிப்போனது. அவன் வாழ்க்கையின் மிகப்பெரிய அவமானம். தங்கையை மணமுடிக்க இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டியதாகிற்று. தம்பியின் படிப்பும் கேள்விக்குறி. கோபம் அவன் கண்களை மூடிவிட்டது. இதற்கெல்லாம் காரணமான அந்த தாசில்தார்மீது வெறுப்பேறியது. அவனுக்கு அதைப் புரியவைக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் இனி தவறே செய்திடக்கூடாது. அவனின் எண்ணம் அதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. கொள்ளையடிப்பதை பணமுள்ளவனிடம் அடிக்கவேண்டியதுதானே, நான் என்ன பாவம் செய்தேன், என்றெல்லாம் புலம்பித்தீர்த்தான் மனுதுக்குள்ளே.
தாசில்தாரின் வீட்டருகே சென்று அவரின் நடவடிக்கைகளை அனைத்தையும் நோட்டமிடத் துவங்கினான். பத்துனாட்கள் மாறுவேடத்தில் நெருக்கமாகக் கவனித்தான். காலையில் 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். சரியாக 6 மணிக்கு தினமும் வீட்டருகே உள்ள கோவிலுக்குச் செல்கிறார். அடுத்தவன் வாழ்வை கொஞ்சமும் இரக்கமின்றி அழித்துவிட்டு, கடவுளுடன் என்ன வழிபாடு வேண்டியதிருக்கிறது? செய்யற தப்பையெல்லாம், பாவங்களையெல்லாம் செய்துவிட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால்மட்டும் பாவம் கழுவப்பட்டுவிடுமா? இதில் அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குவேறு தானம்! அதன்பின் அருகிலுள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி. மைதானம் செல்லும் வழியில் ஒரு சிறு பாதை. அங்கு ஆளரவமே இல்லை. சரியாக பத்துக்கு அலுவலகம். இப்படிப்பட்டவங்கள் எல்லாம் வேலைக்குமட்டும் சரியாகவே சென்றுவிடுகிறார்கள். மாலை 7 க்கு மறுபடியும் வீடு. இதுதான் அவரின் ஒருனாளின் வாழ்க்கை. இவற்றில் கோவிலிலிருந்து மைதானம் செல்லும்வேளை அந்த சிறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை, அவரைத் தாக்க சரியான இடமாக அவனுக்குத் தோன்றியது. அந்த நேரத்தையே முடிவுசெய்தான். ஒரு 14எம்எம், ஆறடிக் கம்பி ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டான்.
அந்த இடத்திற்கு அந்த நாள் வந்தார். சரியாக பின் மண்டையில் ஒரே அடிதான் சுருண்டு வீழ்ந்துவிட்டான். கிரிக்கெட்டின் புல்ஷாட்பொல். கோவிலுக்குச் சென்று அதே கடவுளை தரிசித்தான். அவர் அவனைப்பார்த்து இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார். ஒரு தீவிரவாதம், உருவாக்கம்.

ஒட்டியிருக்கும் உயிர்வாசம்


அன்ன நடை, நடையிளொரு இடை
நாதம், சதங்கை எறிந்த கீதம்,
ஓசையை உருக்கி ஊற்றி ஒத்த
அந்த சிங்காரச்சிரிப்பு அலைகள்.

அருகினில் தடதட தாளமிட்டு
துள்ளியோடிய கானகக் காட்டாறு.
அதில் பதிந்தோடிய பாதங்களின்,
ஒய்யார நாட்டியநடை நடிப்பு.

மலர்ந்த தாமரை, மத்தியில்
தேன்சுவை உண்டு சுழன்று
கவிபாடித் துவண்டு துடிக்கும்
காட்டுக் கருவண்டுக்கண்கள்.

சீலையது மஞ்சளில் சுற்றிவைத்த
பூஞ்சோலை, உன்மடி சாய்ந்து
பூசிக்கொண்ட காதலால் இன்னும்
ஒட்டிக்கிடக்குது அந்த மஞ்சள்.

ஒட்டிய பட்டு, உடல்கட்டி,
வீசிய வைரஒளி, முகம் மின்னி,
மணம் சென்று மயக்கிய மனம்,
பதறினபொழுது நீட்டிய மடிசாய்ந்து,

சொடுக்கிய அந்த விரல்கள்,
அதில் திணிந்த மிஞ்சின மிஞ்சி,
சதைச் சந்தனக்காட்டின் நாற்று,
நாட்டிய உயிரையும் கட்டியிழுத்து

கொண்டாடி வீழ்ந்தது,வீழ்ந்ததுதான்
இன்னும் எழமுடியவில்லை.
ஆண்டு இருபது ஆனபின்னும்.
வீசிக்கொண்டும், வாசம்தந்துகொண்டும்.

பிரிதலின் வலியுணர்த்திட,
உண்மைக் காதல் மொழி உரைத்திட,
தாகம் இன்றியும் நீர்தந்து
மகிழ்ந்தாள், இன்றும் இனித்திட.

கணணி கற்றுத்தந்து, கலவரமாகி
கண்கள் கசியவிட்ட காதலை எடுத்து
கோர்த்து வைத்திருக்கிறேன்,
இன்றும் கொஞ்சமும் குறைந்திடாமல்.

ஆழ்கடலாய் சோகம் இருப்பினும்
அதில் நல்முத்தாய் ஒளிர்ந்த காதல்
நினைந்து, கூட்டிற்கே வந்திட்ட
நின்னன்பு, கண்ணினுள்ளேயே நிற்க.

நானெப்படி என்னை மறைக்க,
கொண்டிருக்கும் உன்னை மறக்க,
ஒட்டிக்கிடக்கும் பசுமர
நிகழ்வுகளைத் துறக்க.

Monday 11 March 2013

இறைத்தன்மையால் பெண்


அந்த கேலக்சியின் பெயர் எஃஸ்யி. அதில் அந்த சூரியனின் பெயர் எஃஸ்யி91. நம் சூரியனைப் போல லட்சம் மடங்கு பெரியது. மொத்தம் 7500 கிரகங்களைக் குடும்பமாகக் கொண்டது. அதில் ஐ23 என்ற கிரகத்தில் வாழும் சிலிகானால் ஆன ஜெல்லிபோன்ற உயிரினம், ஜெ எனப்படுவது. அவைகள் ஆன்மசக்தியில் உருவாகி வாழ்பவை. எந்தவிதமான உருவத்திற்கும் மாறத்தகுந்தவை. எல்லாவிதமான உணர்வுகளையும் அறிய வல்லவை. அவைகளின் ஞானக் குழு ஒரு கருவியினைக் கண்டுபிடித்தது.
அதாவது ஒரு ஜெயை அந்தக் கருவியினுள் இட்டு -272.9999 டிகிரி செல்ஷியசுக்கு உறைய வைத்தால் அந்த ஜெ ஒரு எலெக்ட்ரானாக உரு மாற்றப்பட்டுவிடும். பின் அந்த எலெக்ட்ரானை அந்தக் கருவியின் மூலம் எய்தால், அது எலெக்ட்ரானின் கூடுவிட்டுகூடு பாயும் வேகம்போல் செல்ல வல்லது. அதுபோல் அதன் ரிவர்சை போட்டால் மறுபடியும் அதே கிரகத்திற்கு திரும்பிவிடும்.
இப்பொழுது ஒரு பெண்ஜெல் ஜெயை பரிசோதனையாக அந்தக் கருவியில் இட்டு எய்வதாகத் திட்டம். அந்தக் கருவியினுள் ஒரு ஜெயை அமர்த்தியாயிற்று. அதை -272.9999 டிகிரி செல்ஷியசுக்கு மாற்றி பின் எய்தாகிவிட்டது. அது ஒரு எலெக்ட்ரானாக உருமாறி 30 செக்கண்டில் அதற்கு மிக நேர்கோட்டில் அமைந்த பூமியின், தமிழ்நாட்டின், சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் வந்தும் சேர்ந்துவிட்டது. பூமியினை வந்தடைந்ததும் இங்குள்ள காந்தத்தன்மையின் மாற்றத்தால் சிலிகன் ஜெல்லால் ஆன ஒரு பெண்ணாக, நடிகை ஸ்னேகாபோல உருமாற்றம் அடைந்தது.
அவன் சத்திரப்பட்டியிலேயே வாழ்ந்து வருபவன். அவனுக்கு நடிகை ஸ்னேகா என்றால் மிகவும் பிடிக்கும். ஏன் தினமும் அவளைப்பற்றிதான் அவனின் கனவுகள் எல்லாமே. அவளுக்குப் பிடிக்கும் என்பதாலேயே அவனுக்கான உடைகள், இன்னபிற சாமான்கள் அனைத்தும் சென்னை செல்லும்வேளை சரவணா ஸ்டொர்ஸிலே வாங்கிவருவான். அன்று இரவும் அவள்பற்றின கனவுகள் அவனுக்கு ஒளிதர பட்டென நடுயிரவில் விழித்துக்கொண்டான். குடிசையின் வெளியில் அமைந்த திண்ணையில் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அப்பொழுதுதான் அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை. அங்கே அவனின் கனவுக் காதலி ஸ்னேகா அவனை நோக்கி பஞ்சுமெத்தைமேல் நடப்பதுபொல் அசைந்து நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளை வரவேற்றான். நனாவா என்பதற்காக கையைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டான். நனவுதான். வீட்டினுள் எவரும் இல்லையாதலால் வீட்டினுள் அழைத்தான். வந்தாள். அப்படியே அவளையணைத்து படுக்கையில் கிடத்தினான். முத்தமிட்டான். மொத்த உடலும் நொங்குபொல பஞ்சாக இருந்தது. இப்பொழுது கலவி ஆசையில் அவளை மெதுவாக கட்டிக்கொண்டு கலவினான். உச்சயின்பம் கொள்ளும்வேளை அவனால் அந்த இன்பம் உடல்முழுவதும் பரப்பப்படுவதை உணரமுடிந்தது. ஆனால் ஆச்சரியம் அந்தக் கலவி முடிந்தபின்னும் அந்த இன்பத்தின் அளவு பலமணி நேரம் குறைந்திடவேயில்லை. சிறிது நேரத்தில் ஸ்னேகா எழுந்து வெளியில் சென்றாள். அவன் சில மணிக்குப் பின்னர் வெளியில் சென்று பார்க்கையில் அவளைக் காணமுடியவில்லை. மறைந்துவிட்டிருந்தாள். ஆனாலும் அவனுக்குக் கிடைக்கப் பெற்ற உச்ச இன்பம் கொஞ்சமும் குறைந்திடவேயில்லை.
ஞானக்குழு ரிவர்ஸ்ஸை அழுத்தியதும் அவள் சட்டென விண்வெளியில் பறந்தாள். பூமியின் கட்டுப்பாடு தாண்டியவுடன் -272.9999 டிகிரி செல்ஷியஸ் வந்தவுடன் அவள் ஒரு எலெக்ட்ரானாக தன்மாற்றம் பெற்று 30 நொடியில் ஐ23 கிரகம் வந்தடைந்தாள். அங்கு தன்னனுபவத்தினை எல்லோர்க்கும் விவரித்தாள்.
அவனுக்கு அவளுடன் கொண்ட உடலுறவால் அதன்பின் உச்ச இன்பம் குறையவேயில்லை. மகிழ்ந்துபோனான். இறைவனைப்பொல் உணர்ந்தான்.

Saturday 9 March 2013

தீநீ நீதீ


சத்தியமாய் சத்யா,
நீயொரு சக்திநிலாதான்.
நிலாப்பெண்ணை நேரில் தந்த
மதி நிறைந்த மதிநிலா.
பாலமிடும் நிலாத்தோழி.
ராஜி என்றழைக்கமுடியாத
தீயினை உடல்கொண்ட தீக்கவி.

அருகினில் உலவும்,
முகம் மறைத்திடும்,
கண்ணில் காதலினை
நிறைத்து நடித்திடும்,
நந்தவனத்துப் பைங்கிளி நீ, தீ...
கடைசியில் மாறிப்போன சாந்தி.... 

Friday 8 March 2013

அவளுக்கும் மகளீர்தினமா


நினைத்து நினைத்துத்தான் பார்க்கிறேன்,
அன்னியப்படுத்திப் பார்த்திடமுடியவில்லை
அந்த அருமை மகளீரை.

அவள் உறங்கிப் பார்த்ததில்லை
சிரிப்புடன் மரணித்துக் கிடத்தும்வரை.

விழிப்பது அதிகாலையாய்த்தான் இருக்கும்,
படுப்பது பின்னிரவாய்த்தான் இருந்திருக்கும்.

கண்விழித்ததும் நாங்கள் காண்பது,
கால்களை நீட்டி அமர்ந்து கதை விவாதம்
செய்திடுவது அன்றய தினசரிச் செய்திகளை.

அடுத்த நொடி இனிமையான அந்த டீ.
அரட்டையொடு சேர்ந்த அரவணைப்பு.
அன்பாக அதிலொரு ஆரவார சண்டை.

இங்கே இப்பொழுது பேசிக்கொண்டுதானே
இருந்தாள், பின்னெப்பொழுது சமைத்தாள்?
விளங்கவேமுடியாத அசுரவேகம்.

பள்ளி செல்கையில் வைத்த இடம்
மாறி மறந்த பொருள் அனைத்தையும்
எடுத்து அவரவர்க்கு தேடித்தேடியுதவி.

மாலையில் விளையாடையில்,
நேரம் சிலதுளி தாண்டையில்
தொடையில் நுள்ளிடும் பொறுப்பு.

தூசி கண்டதில்லை, நேரம்
தவறியதில்லை, சமையல் ருசி
மாறியதில்லை, வைத்த பொருள்
இடம் மாறிப்போனதில்லை.

உறங்கியதை, சமையல் செய்வதை,
வேலை செய்வதை, மற்ற இன்னபிற
கடமைகளை செய்வதினை கண்டதில்லை.

கண்டதெல்லாம் நேரத்திற்கு எல்லாமும்
கணகச்சிதமாய் முடிந்திருந்ததைத்தான்.
எந்தப்பொழுது நடக்குமென யூகிக்கமுடிவதில்லை.

வெளிவேலைகள் எல்லாமும் அவள்தான்.
காய்கறி வாங்கிவருவதும் அவள்தான்.
மாவாட்டுவதும் மாடுகறப்பதும் அவள்தான்.

தெருவினில் வரிசையில்னின்று நீர், குடம்
குடமாய் கொண்டுவருவதும் அவள்தான்.
அங்காடி பொருள் சுமப்பதும் அவள்தான்.

முழுவாரமும் என்றென்று என்ன
சமையல் என்பதினை முடிவுசெய்து,
வருமான மிச்சம் செய்வதும் அவள்தான்.

வரவு செலவு, வாங்கவேண்டியது,
கொடுக்கவேண்டியது, பார்க்கவேண்டியது
மருத்துவ ஒதுக்கீடு மொத்தமும் அவள்தான்.

வாழ்ந்தவரை மக்களுக்காகவும்,
மனைக்காகவும்,மணவாளனுக்காகவுமே
மனம் நோகாமல் இன்பமாய் வாழ்ந்தவள்.

துன்பங்களையும் இன்முகமாய் கொண்டு,
துயரங்களையும், வறுமையினையும்,
வென்று வாழ்வுக்கு ஒளிவிளக்கு ஏற்றியவள்.

முழு உரிமையையும் கைக்குள் கொண்டவள்.
தருணத்தில் சரியான முடிவுகளையே எடுத்தவள்.
குறையாய் எதையும் எவரும் பேசிட இடம்தராதவள்.

கும்பிடும் தெய்வமான தாயவள்தனை எங்ஙனம்
மகளீர் என ஒதுக்கி முத்திரையிட்டு தழுவத்தழுவ,
வாழ்த்திடுவது சொல்வீர் எம் நண்பர்காள்.

தெய்வம், தாயில்லாமல் எவருமில்லை.

Monday 4 March 2013

மணம் பரப்பிய மலர்


நண்பர்கள் அவையில்
தலை குனியாத கம்பீரத்துத்துடன்
சுற்றி திரிந்த மாவீரன் நான்,

சொல்ல நினைக்கும் கருத்தை
நினைத்த நொடியில்
பட்டாசு போல வெடித்து சொல்லும்
நான்,

எந்த போட்டியிலும் ஜெயித்து
வந்த நான்,

உன் மீன் விழியின்
கடை கோடி பார்வையில்
சிக்கி சின்னாபின்னமாகி
சொல்ல நினைத்ததை
சொல்ல முடியாமல்
தோற்று போய் நிற்கிறேன்..

உன் மீதான
என் காதலை கூட
உன் கண்களுக்குள்
வீசியெறிய தயங்குகிறேன் ....
ஆயினும்....

தேன் சுரக்கும் உதற்றினுள் சிக்கி
தேனூற்றினுள் கரைந்திட ஆசை.

மீன் குளிக்கும் நீரினுள் நீந்தி,
உயிர்கொண்டு பூசிவிட ஆசை.

உன் உயிர்த்துளி சக, ஈர்தச மூன்றில்
ஒர்தசம் என்னை விதைத்திட ஆசை.

இங்கு உடலுண்டு, உயிருண்டு,
மணம்பரப்பும் மலருண்டு,
உணர்வுண்டு, உரிமையோடு
உள்ளம் கொள்ளும் காதலுண்டு,

கண்ணே காணக் கனவுமுண்டு,
கனவுக்குள் கலவுமுண்டு,
களவு செய்த நிலவுமுண்டு,
கண்ஜாடைக் கதையுமுண்டு,

காண், கவிபாடி மனம் கலைத்த
மல்லிகையைத்தான் காணவில்லை.

Sunday 3 March 2013

நிரந்தரப் புன்னகை


சாளரத்தின் வழி இறங்கிய
வலுத்த காற்றில்
வழிந்த தென்றல்,
நிரப்பின அறையினைப்போல்,

எனக்குள் பரவின
உன் ஆன்மக் காதல்
உன் உயிரினையும்
சேர்த்து ஓட்டிச் சென்றது.

மணவாழ்வில், துணைகள்
இணைபிரியா தண்டவாளங்கள்தான்.
அவைகளின் முடிவிலும்
சேர்ந்திட வழியில்லை.

காதலின் ஆன்மநிலையில்
அவை பிணைந்து இணைபிரியா
மின்கம்பியின் இணைப்புதான்.
அவை முடிவில் ஒளிருபவை.

காதலுடன் பெரும் மணம்,
பூத்துக் குலுங்கும் சோலை.
புன்னகையின் நிரந்தரம்.
இறைவனின் சந்நிதானம்.

Friday 1 March 2013

வானம் தொட்டுவிடும் தூரம்


இது உள்ளே தவழ்கிறோமா,
வெளியே பறக்கிறோமா,
இது எதனால் ஆனது.

ஏதாவதொன்று உண்டெனில்
அது எத்தனினுள்ளாவது
இருந்திட வேண்டும்தானே!

கருப்பினைக் கொண்டது
உண்மை வெண்மையினை
உலகுக்கு விதைத்தது.

இந்த இருப்பின் உயரம்தான் என்ன
ஏறியபின் வருவதென்ன
அப்படியாயின் இது எதனுள் இருக்கிறது.

தீயினைப் படைத்தாய்,
நிறம் பார்க்க முடிகிறது,
எதநினை வைத்து உருவாக்கினாய்.

அணுக்களையும் அதனினுள்
காந்தத் துகளையும் கொடுத்தாய்,
அவை எதனால் செய்யப்பட்டது.

நாக்கில் பட்டதும் அறுசுவை
பட்டுத் தெறிக்கும் மூளையினுள்,
சுவைகள் எதனால் நெய்யப்பட்டன.

காற்றினில் வரும் கீதம்,
காதினில் வருடும் தேன்
இசையின் உட்பொருள்தான் என்ன.

காண்பதெல்லாம் அழகு,
பட்ட ஒளியெல்லாம் இனிமைதான்
வர்ணமாலை புனையப்பட்டது எதனால்.

புரியாத புதிராய் எல்லாமும்
கண்முன்னே களம் அமைப்பினும்
கல்லான பொருள்தான் இந்தக் கடவுள்

இறை போதித்த இன்பம்


ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.

அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.

தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.

ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.

தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது.

அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” என்றது.

தம்பி கிளை கடுப்பாகி விட்டது. “ச்சீ..நீயெல்லாம் ஒரு கிளையா? இங்க உசுரே போகுதுங்கிறேன். ஜில்லுன்னு இருக்குன்னு லொள்ளு பண்றே..அய்யய்யோ..தூக்கித் தூக்கிப் போடுதே” என்றது.

அண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல?” என்றது.

‘இனியும் இவன்கூட பேசக்கூடாது’ என்று முடிவு செய்த தம்பி கிளை, ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன், இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே என்று புலம்பித் தள்ளியது. அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க்கொண்டிருந்தது.

கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பி கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு. இந்த நல்லதண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு. அங்கே கடலுக்குள்ள போனா கன்ஃபார்மா சாவு தான்” என்றது.

“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.

“தெரியுமா? அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே?”

“ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி. அதனால் எப்படியும் நம்ம கதை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாத்து வெள்ளம். அப்போ நமக்கிருந்தது ரெண்டே சாய்ஸ் தான். ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு ,அந்த கஷ்டத்தையே எஞ்சாய் பண்றது. இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாவுறது.நான் முதல் சாய்ஸை எடுத்தேன். நீ இரண்டாவதை எடுத்தே..ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு. ஆனாலும் நான் சந்தோசமா சாவை நோக்கி வந்தேன். நீ அழுதுக்கிட்டே வந்தே. இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை. இடைப்பட்ட பயணம்..அதுல நல்ல சாய்ஸ்-ஐ நாம தான் எடுத்துக்கணும்”

தம்பி “நீ சொல்றது சரி தான்ணே..நான் வேஸ்ட் ஆக்கிட்டேன்”ன்னு சொல்லும்போதே கடல் வந்துவிட்டது. இருகிளைகளும் கடலில் சங்கமித்தன.

இதையே காப்மேயர் ‘மழை பெய்யட்டும்’ என்றார். எங்கோ அவசரமாகக் கிளம்புகிறீர்கள். மழை பிடித்துக்கொண்டது. இப்போது உங்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, ’என்னய்யா மழை இது’ என்று டென்சன் ஆவது. இரண்டாவது மழை பெய்யட்டும் என அமைதியாக மழையை ரசிப்பது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?