Thursday 31 January 2013

கொஞ்சம் ஆணவம் நிறைய அன்பு


அவளுக்கு தான் ஒரு பேரழகியென்று ஒரு அதீத கர்வம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும் அவள் தேவதையைப்போல் மிக அழகாகத்தான் இருந்தாள். கல்லூரியில் படித்த வாலிபர்கள் பலரும் அவளின் அழகில் சொக்கி நிலை தடுமாறியே இருந்திருக்கின்றார்கள்.
அவளின் தரிசனம் காண, நிலைமறந்து இன்னும் எவரும் அந்தச் சாலையை கடக்கும்பொழுது கவனக்குறைவில் விபத்தில் சிக்கிடவில்லை. கடவுளை தினமும் வேண்டிக்கொள்வாள் போலும். அவளை முதல்முதலாகப் பார்ப்பவன் மறுமுறையும் பார்க்க விரும்பாமல் திரும்பியதில்லை. கல்லூரி வளாகத்தில் அவளைக் கவர்வதற்காக நடக்கும் தினக்கூத்துக்கள், அவற்றை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம். அவள் எங்கு சென்றாலும் அந்த இடம் திருவிழாக் கூட்டம்தான். அவளை ரசித்துக்கொண்டே இருக்கலாம் நாள்முழுதும். அத்தனை அழகு. ஒருமுறை ஒரு கல்லூரி ஆசிரியர்கூட அன்புப் பெருக்கால் அவளுக்கு காதல் கடிதம் கொண்டு தந்திருக்கிறார். பின்பு அவள் அவன் கைகளில் சகோதரக் கயிற்றினைக் கட்டி சமாளித்திருக்கிறாள். அவளால்தான் அந்த ஊரில், ஏரியாவில் ஆண்களின் அழகு சாதனப் பொருட்களும், தலைக்கு அடிக்கும் கருப்பு மையும் விற்பனையில் அமோகமாய் இருந்திருக்குமோ என்னவோ. ஒருமுறை கல்லூரியின் அழகிப் போட்டியின்பொழுதுகூட மற்ற அழகிகளின் வேண்டுகோளுக்கிணங்க போட்டியில் இருந்து விலகி விட்டிருக்கிறாள். இப்படி ஒரு உலகமே அந்த ஊரில் அவளைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருந்தாலும் அவள் யாரையுமே காதலிக்காமல்தான் இருந்துகொண்டிருந்தாள். அவள் நினைக்கும், எதிர்பார்க்கும் அந்த ஆணழகனை இதுவரையில் அவளால் காணமுடியவில்லை. அதற்காக அந்த ஊரில் அழகான ஆண்மகன்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது.
படிப்பிலும் அவள் புலிதான். CA படித்தல் அவளின் லட்சியம். பிகாம் 2 ஆம் வருடம் முடிந்தது. விடுமுறை நாட்கள் கழிந்து 3 ஆம் வருடம் துவங்கிய நாட்கள் அது. அவள் புதிதாக வாலிபால் விளையாட படித்திருந்தாள், விடுமுறை காலங்களில். பள்ளியின் பெண்கள் வாலிபால் குழு அமைக்க வீராங்கனைகளின் தேர்வு அன்று. அவளுக்கு இடம் கிடைக்கவில்லை. PD யின் அறைக்கு சென்றிருந்த பொழுதுதான் அவனைக் கண்டாள். அவன் யார்?
ஆறடி இருந்தான். ஆண் என்பதற்கான துல்லியமான அடையாளம் அவன்தான். நல்ல அழகுவேறு. எம்காம் 1 ஆம் வருடம் சேர்ந்திருக்கிறான். அவள் மனத்தை சிக்கச் சிக்க சிதரடித்தான். சில நாட்களாக அவனைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தாள். நல்ல கிரிக்கெட் வீரன் வேறு. அவளும் சிலநேரங்களில் நேரம்போகாத பொழுதுகள் கிரிக்கெட் பார்ப்பாள். கிரிக்கெட்டை பற்றி அவளுக்கும் கொஞ்சம் தெரியும். கேண்டீனில் ஒருநாள் சத்தமான சிரிப்புடன் அவன் அரட்டை அடிப்பதைக் கண்டாள். நல்ல அரட்டைப் பேர்வழி. கல்லூரியில் கிடைக்கும் நேரங்களெல்லாம் நூலகத்திலேயே கிடக்கிறான். அவன் ஒரு புத்தகப்புழு. அவளுக்கு அப்படியில்லை. இருவரும் காமர்ஸ் என்பதால் துறை அறையில் அடிக்கடி வலிய சென்று காணத் துவங்கினாள். இதுவரையில் அவன் அவளை காண ஒருமுறை கூட திரும்பியதேயில்லை, என்பது அவளுக்கு என்னவோபோல் இருந்தது. இவன் வித்தியாசமானவன்.
ஒருநாள் அவள் சில தோழிகளுடன் நடந்துசென்று கொண்டிருக்கும்பொழுது, அவனும் அவனின் சக கிரிக்கெட் தோழனும் எதிரில் வருவதைக் கண்டாள். நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திட முடிவுசெய்தாள். அவன் அவர்களை நெருங்கினபொழுது, கொல்லென நக்கலாக சிரிப்பதுபோல் அவனைப் பார்த்து சத்தமாக சிரித்தாள். சரியாக அவன் நின்று, அவள் முன்வந்து "என்ன கிண்டலா, இந்த நக்கல் சிரிப்பெல்லாம் இங்க வச்சிக்கிடாத, ஏமூஞ்சியப் பாத்தா ஒனக்கு சிரிப்பா இருக்கோ?" என்று அரற்றிவிட்டு சென்றான். அவள் அப்படியே உறைந்து விட்டிருந்தாள். இரண்டு நாட்கள் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனை சந்திக்க பயந்தாள். இரவு தூங்கிடவும் முடியவில்லை. இதுவரையிலும் எந்த ஆண்மகனும் அவளிடம் இப்படி கடுமையாக பேசியதேயில்லை. இவன் என்ன பெரிய இவனோ? என்றுகூட கோபப்பட்டுப் பார்த்தாள். ஆனாலும் அவனின் நினைவுகளிலிருந்து அவளால் வெளிவர இயலவில்லை. அவனை காதலிக்கிறாள்.
அவளுக்கு சிலநேரங்களில் அவள்மேலேயே கோபம் வரத் துவங்கிவிட்டது. சிலநாட்களுக்குப் பின் கல்லூரி PD அறையின் முன் அவனைப் பார்த்தாள். அவன் கண்டுகொள்ளவில்லை. அவனிடம் நேராகச் சென்று, மன்னிப்பு கேட்டாள். மேலும் அன்று, தான் அவனைப் பார்த்து கேலியாக சிரித்திடவில்லை என்றும், தோழிகளின் அரட்டையின் பொழுது தன்னிச்சையாய் நிகழ்ந்த நிகழ்வுதான் அது என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. மற்றொரு முறை கேண்டீனில் சந்தித்தபொழுது அவன் அவளுக்கு காப்பி வாங்கித் தந்தான். இனித்தது. மாநில கிரிக்கெட் போட்டி அவர்கள் கல்லூரி வளாகத்தில் நடந்தபொழுது அடிக்கடி அவனை சந்தித்துப் பேசினாள். அவனின் திறமையாலேயே அந்தவருட கோப்பை அவர்களின் கல்லூரிக்குக் கிடைத்தது. அவனை வாழ்த்தினாள். கைகுழுக்கி விருந்து வேண்டும் என்று விளையாட்டாய் கேட்டாள்.
அவள் அவனுடன் மிகவும் அன்னியோனியமாக பழகுவதை உணர்ந்து அவன், ஒருநாள் அவளிடம் தனியாகப் பேசிடக் கேட்டான். அவள் ஆனந்தத்தில் துடித்துக் கிடந்தாள். சந்திப்பின்போழுது அவன் வழவழவென பேசாமல் நறுக்குத்தெரித்தற்போல் சொன்னான்," உன் மனநிலை நீ என்னை காதலிக்கிறாய்போல் எனக்குத் தெரிகிறது. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் உன்னை காதலிக்கவில்லை. நாம் நண்பர்கள் மட்டுமே." என்று சொல்லிவிட்டு சரசரவென்று சென்றுவிட்டான்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளின் மனக்கண்ணில் ஒவ்வொருமுறையும் அவளை சுற்றிவந்த ஆண்களின் கூட்டம் கேலியாய் சிரிப்பதுபோல் வந்துசென்றது.

Sunday 27 January 2013

நிமிடத்தில் மரணம்


அது எங்கிருந்தோ பறந்து வந்தது,
எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
மேலிருந்து கூர்ந்து நோக்கினது,
என்னை மிகவும் ரசித்திருந்தது.
அதன் நடை அழகாக இருந்தது,
என்னைக் கொஞ்சம் கலவரப்படுத்தியது.
என்னை மிக அருகினில் அமர்ந்து ரசித்தது, முகம்சிவந்து வெட்கமாகிப்போனது.
கன்னத்தில் கொத்தியதுகூட இனிமை
அன்புக்காகதான் என்பதால்.
நான் கொண்ட உணவிலும் சிறிதை
உரிமையோடு பகிர்ந்துகொண்டது.
எனக்கு வான்வெளியில் மிதந்திடக்
கற்றுக்கொடுத்ததூவும் அதன் கருணைதான்.
என் முகம் திருப்பி அதைநோக்கி நகைத்ததும்
பயந்து உமிழ்ந்துபின் பறந்துவிட்டது.
சென்ற வானைக் கண்கொட்டாமல்
பார்த்துக்கிடக்கிறேன் வெறுமை பருகி.

மறு ஜென்மம்


அவள் விரும்பி விபச்சாரத்திற்குச் செல்லவில்லை. சொல்லப்போனால் அவள் ஒருவனை மனதாரக் காதலிக்கவும் செய்கிறாள். குடும்ப சூழ்நிலை, அதற்குள் தள்ளப்பட்டுவிட்டாள். அவளால் ஒன்றும் செய்துவிட முடியவில்லை. என்னசெய்வது, இந்தியாவில் ரூ. 2 1/2 லட்சம் வருமானவரி வரம்பு. (அவளின் குடும்ப வருமானம், மாதம் 2000 ரூ தான் இருந்தது.) அப்படியானால் ஒவ்வொரு குடும்பமும் அந்தவருமானம் பெற அரசு உதவி, உயர்த்திட வழிவகை செய்திடல் வேண்டுமல்லவா? அதற்காகத்தானே அவர்களுக்குப் பதவிகள் தரப்பட்டிருக்கின்றன. ம்ம்ம்ம்... இருந்தும் இந்திய அரசுக்கும் அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் மொத்தமாக கொள்ளையடித்து அவற்றைக் கருப்பாக்குவதிலேயேதான் ஆர்வம். நாட்டு மக்களைப்பற்றி ஏது நினைவுகள்? இப்பொழுது அவளின் வருமானம் அதிகம். எவ்வளவு என்று சொல்லிவிட்டால் பொறாமை கொண்டுவிடுவீர்கள். ஐந்துநாட்கள் வேலை செய்கிறாள். அதற்குமேல் அமெரிக்க அதிபரே அழைத்தாலும் வரமாட்டாள். வருமான வரிவரம்பில் இரண்டு மடங்கு அவளின் மாதவருமானம். வருமான வரியெல்லாம் கிடையாது. 18 வயதிலிருந்து 23 வயதுவரை தொழில் செய்தாள். வீடு கட்டிவிட்டாள். எல்லா வசதிகளும் அடைந்தவள், எல்லாவற்றையும் சொந்தங்களுக்கு விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிவந்து காதலுக்கு மரியாதை செய்து, காதலன், அவனையே திருமணம் முடித்து குடும்பம் நடத்தி வருகிறாள். பழையவாழ்க்கையின் சுவடுகளை அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டாள். சொந்தங்களை மொத்தமாக மனதிலிருந்து கொன்று எறிந்துவிட்டாள். சுத்தமான மனம் பெற்றுவிட்டாள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறாள்.
இனிமையான குடும்பம். ஒரேயொரு மகன். அதோடு போதுமென்று முடிவுசெய்துகொண்டார்கள்.
சந்தோசமாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில், கணவன் அவள்மீது கொஞ்சம் சந்தேகம் கொள்வதினை உணர்ந்துகொண்டாள். அவளின் ஒரு புகைப்படம் முகப்புத்தகத்தில் விபச்சாரிகளின் பக்கத்தில் நிர்வாணமாய் வெளியாகியிருந்தது. அதுதான் அவனின் நடவடிக்கைகளின் காரணம் என்று தெரிந்தது. உடனேயே வேறொரு படத்தைகொண்டு ஒரு முகப்புத்தகத்தின் கணக்கு ஒன்றினைத் துவங்கினாள். நாட்கள் சென்றன. ஒருநாள் அவன் அவளிடம் கேட்டான். காட்டினான். அவளும் அவளின் முகப்புத்தகத்தின் கணக்கினை காண்பித்தாள்.
அவனும் அவளுக்கு ஆருதல்கூறி, இப்படித்தான் பெண்களின் படத்தினை எடுத்து மாறுதல்கள் செய்து விபச்சார பக்கங்களில் வெளியிடுகின்றார்கள், அதனால் உன்படங்களை முகப்புத்தகத்தில் வெளியிடாதே. இருக்கும் படங்களையனைத்தும் அழித்துவிடு என்று அறிவுரை சொன்னான். அதற்கு அவள், அவனுக்குப் பரிசாக ஒரு முத்தம் தந்தாள்.

Tuesday 15 January 2013

எல்லை என்பதே இல்லை!


தமிழும் கவிதையுமாய் இருந்த என்னை
மாற்றி வைத்தாய்!....அன்புக்காய் ஏங்கிய என்னை
பாசத்தால் அரவணைத்தாய்!

விடியும்போதெல்லாம் உன் உருவிலே
என் விழி திறக்கும்!
இடைவிடா வேலைகளுக்கிடையிலும் ...
என் நினைவுகள் உன்னை சுற்றியே பறக்கும்!

மனம்கவர் பாடல்கள்
காதில் ஒலிக்கும்போதெல்லாம்...
நீ எனக்காய் பாடுவது போலவே இருக்கும்!

பூக்கடையில் சிரிக்கும் மல்லிகையை
பார்க்கும்போதெல்லாம்...
என்னவனின் முகம் என்றே என்னுள்ளம் ஆர்பரிக்கும்!

உன் வாய்வழி கசிந்த கடும்சொல் கேட்டு
என் மனம் துடி துடித்து இறக்கும்!....பின் ,
எனைக்கொஞ்சி குளிரவைப்பாய் என்றே
நம்பி அது மீண்டும் ஆவலுடனே உயிர்க்கும்!

உன்னை மறந்திருக்கவோ என்னால் முடிவதுமில்லை!
இந்த பெண் வண்டுக்கோ உன் நெஞ்சம்தானே முல்லை!

நான் உறங்கையிலும் செய்கிறாயே..
என் கனவுக்குள் தொல்லை!
நான் உன்மேல் கொண்டுள்ள அன்புக்கோ
எல்லை என்பதே இல்ல.

Sunday 13 January 2013

மாறியது நம்... கிடைத்தது உன்...

எனக்காகவே சிரிக்கின்றாய்... 
எனக்காகவே அழுகின்றாய்... 
எனக்காகவே நிழல் போல நடை போடுகின்றாய்... 
எனக்காகவே உன் வாழ்க்கைப் பயணத்தை 
தொடர நினைக்கின்றாய்... 
அனைத்தும் தெரிந்திருந்தும் 
உன்னை விட்டு விலகியே நிற்கின்றேன் நான்... 
நம் நலன் கருதி... 
இல்லை இல்லை... 
உன் நலனை மட்டுமே மனதினிற்கொண்டு... 
விலகியே நிற்கின்றேன் நான்...

நீ பேசாத நாட்களெல்லாம் 
மனதினைக் கொன்று 
சித்திரவதை செய்கிறது 
என பொய் சொல்லத் தோன்றவில்லை... 
ஆனால்... 
ஏதோ ஒரு இனம் புரியா மாற்றத்தை 
ஏற்படுத்த தவறவில்லை... 
இதுதான் மௌனத்தின் வலிமையோ!!!...

விடியும் பொழுது கூட 
உன் பெயரை சொல்லித்தான் 
விடிகிறது... 
இன்றாவது நீ என்னிடம் 
பேசி விட மாட்டயா?!... 
என்ற ஏக்கத்துடன்!!!...

அலைகள் ஓய்வதில்லை... 
ஆம்... நம் மன அலைகள் ஓய்வதில்லை... 
என்னைப் பற்றிய நினைவுகள் 
உன் மனதிற்குள்ளும்... 
உன்னைப் பற்றிய நினைவுகள் 
என் மனதிற்குள்ளும்... 
காரணமே தெரியாமல் 
அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன.....

என் அலை பேசிக்கும் 
ஏதோ ஒரு ஏக்கம்... 
அழைப்புகளில் எதாவது ஒன்று... 
உன் பெயரினைக் 
காட்டி விடாதா என்று?!!!...

கண்கள் எட்டும் தொலைவில் 
நீ இருந்தும்... 
உன்னைப் பார்க்க மறுக்கும் 
கண்களுக்கு... 
எப்படிப் புரியும்?!!!... 
என்றாவது ஒரு நாள் தான் 
உன் தரிசனம் கிடைக்குமென்று?!!...

நாம் இயல்பாய் தான் பேசிக்கொள்கிறோம்... 
ஆனால் கடந்த காலத்தைப் போல் 
நன்றாக பேசிக்கொள்ளும் நிலை... 
இல்லை போலும்... 
நீ ஒன்று நினைக்க 
நான் வேறொன்றை நினைக்க... 
தானாக ஏதோ ஒரு வழியில் செல்கிறது... 
நம் வாழ்க்கைப் பாதை...

என் பிறந்த நாளுக்கு 
நீ பொக்கை கொடுத்து வாழ்த்த வேண்டாம்... 
உன் பொக்கை வாயினைக் கொண்டு... 
பல புன்னகைப் பூக்களை 
உதிர்த்தால் போதுமானது... 
என் அறுபது வயது கிழவியே!!!...

எனக்காக நீ காத்திருந்த நொடிகளெல்லாம் 
அலச்சியமாகவே தெரிந்தன எனக்கு... 
ஆனால் இன்றோ?!!... 
உன் இதழ் விரிக்கும் 
ஒரு துளி புன்னகைக்காக 
மாதங்கள் பல காத்திருக்கின்றேன்... 
பொக்கிசமாய் அதனை 
மனதிற்குள் பூட்டி வைக்க...

விக்கல் வரும் போதெல்லாம் 
விம்மி விம்மி அழுகிறேன்... 
என்றாவது ஒரு நாளாவது 
நீ என்னை நினைக்கிறாயே 
என்ற ஆனந்தத்தில் தான்...

என் கவிதையின் வரிகளுக்கு... 
உயிர் கொடுக்கிறது 
சில நேரங்களில் 
உன்னைப் பற்றிய நினைவுகள்!!!...

Tuesday 8 January 2013

மிச்சமாயும் உச்சமாயும்


நீலப்பந்தின் சிதறிய பச்சையில்
சிறிதாய்யொரு கலங்கள் காடு.
அதில் ஓங்கிவளர்ந்து பெரிதாய் நின்று,
இலைதலை ஆட்டிக்களிக்கும்
ஓர் பிராணன் கக்கும் அரசு.

புரண்டு காதலில் பொங்கிவழியும்,
செவ்விதழ் சிங்காரி,
சித்திரத்துப் சிரிப்பழகி,
பச்சையை உடையாய் கொண்ட,
பதிலுக்குப் பதில்பேசும் பைங்கிளி.

ஏமாற்றுக்காரி, கோபத்தையும்,
தாபத்தையும், காதலையும்,
கோடிட்டுக்காட்டும் வேகத்தையும்
தன்னுள் புதைத்துக்கொண்டு
தடுமாறும் தவிப்புக்காரி.

பிடித்ததெல்லாம் இங்கு
பிடித்திடவில்லை.
கடித்ததேல்லாம் இங்கு
வலித்திடவில்லை.

முகத்தினில் கொடுத்ததெல்லாம்
படித்திடவும் முடியவில்லை.
ஓடிநின்று குலைத்திடுவதேல்லாம்
பழகிடவும் தெரியாததில்லை.

அடைகாத்திட்டக் கருப்புக்கிளி,
கதறிட விருப்பமில்லை.
அருகில் வந்து அன்னத்திற்கு
அணைத்திட ஆசையுமில்லை.

அஞ்சுகமே அடைந்த மகாசிவம்
மட்டுமே காலத்திற்கும்
மிச்சமாயும், உச்சமாயும்.

Friday 4 January 2013

நீ தாய், ஆசான்


என்னை திருத்திவிட்டாய்.
நல்வழிப் படுத்திட்டாய்.
எப்படியொரு காமுகனாய் நின்றிருந்தேன்.
கண்கள் தெரிந்திடவில்லை.
காதுகளுக்கு இனிமையான இசைகூட தேவையிருந்திடவில்லை.
தேவையெல்லாம் உடலும் உடல் சார்ந்த நீயும் மட்டுமே,
என்றுதான் கிடந்தேன்.
அது சரியா தவறா என்பதினைக்கூட யோசிக்க முடியவில்லை.
எல்லாம் காமனின் விளையாட்டுதான்.
புத்திபுகட்டினாய். அடைத்த கண்களுக்கு ஒளியூட்டினாய்.
என்னையும் வாழவைத்தாய்.

காமரசத்தில் ஆன்மாவின் ஆனந்தத்தினை
ஊற்றியூற்றி நிரப்பிவிட்டிருக்கிறாய்.

கோபமில்லை, பொறாமையில்லை, விரக்தியுமில்லை, வெறுப்புணர்வுமில்லை,
ஆனாலும் அன்பு செலுத்தினாய்.

காதலின் நிலை


நாம் சிறந்த நண்பர்கள்தாம் ஆனாலும் நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் காதலுக்கு இடமளித்துவிடக் கூடாது. நம் சந்திப்பில் நாம் தொட்டுப் பேசிக்கொள்தல் கூடாது. சம்மதமானால் நாம் சந்திப்பதைப்பற்றி முடிவு செய்யலாம் என்றாள் வலையில், அரட்டையில் இருந்த அவள். அவனும் சரியென்றான். எல்லா ஆண்மகன்களும் சொல்லுவதுதானே. சந்திப்புக்கு தேதியும் இடமும் முடிவு செய்யப்பட்டது. அதாவது அவளின் கல்லூரி வளாகத்தினுள் ஒரு உள்விளையாட்டரங்கம் உள்ளது, அங்கு சரியாக மாலை 4 மணிக்கு சந்திப்பதென.
இருவருக்குமே அன்றைய பாடத்தில் அக்கறை இல்லாமல் போனது. இருவருக்குமே மதியஉணவு தேவைப்படவில்லை. அவள் அவளுக்குப் பிடித்த பச்சை நிற சேலையில் வந்திருந்தாள். அவன் இளஞ்சிவப்பு. மாலை 4 க்கு வழக்கமான ஆணினம்போல் அவன் அரங்கத்தினுள் நுழைந்தான். வழக்கமான பெண்ணினம்போல் அவள் வரவில்லை. மேலும் அந்த அரங்கத்தின் மூலையில் ஒரு சிறிய ஜன்னலொன்று இருந்தது. சிலநேரங்களில் போக்கஸ் விளக்குப் பொருத்துவதற்காக போடப்பட்ட துளை ஜன்னல். அவள் அவனுக்கு தெரிந்துவிடாமல் கவனமாக அந்தத்துளைஜன்னல் வழியாக அவனை நோட்டமிட்டாள். அம்மாஞ்சி அழகாகத்தான் இருந்தான். ரசித்தாள். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. அவள் கவலைகொள்ளவில்லை. அவன் மிகவும் கவலைகொண்டான். இருமுறை வெளியில் சென்று அவளைத் தேடினான். அவள் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். மணி 5.30. கடைசியில் அவன் வெறுத்துப்போய் கோபமாய் வெளியேற எத்தனிக்கும்போழுது அவள் உள்ளே நுழைந்தாள். அவனின் கோபம் நீரினுள் விழுந்த தீக்குச்சியினைப்போல் அணைந்தது.
இதுதான் அவர்களின் முதல் சந்திப்பு. நேருக்கு நேராய் பார்த்தாள். அவனால் முடியாமல் குனித்துகொண்டான். அவனால் அவளை நேருக்குநேராய் பார்த்திட முடியவில்லை. பின்னர் அருகருகே உட்கார்ந்து அங்கு நடந்துகொண்டிருந்த இறகுப்பந்துப் போட்டியினை ரசிக்க முயன்று தோற்றனர். தேவையில்லாத அத்தனைக் கேள்விகளும் அதற்கு தேவைப்படாத பதில்களுமாய் ஓடிக்கொண்டிருந்தது. சட்டென அவள் கொஞ்சம் அவனை நோக்கி நகர்ந்து அவனின் கைகளில் தன்கைகள் பதமாக உரசிக்கொள்ளும்படி பார்த்துக்கொண்டாள். அது அவனுக்கு வெதுவெதுப்பான எண்ணைசட்டியில் இதமாக விரல்கள் பட்ட சுகத்தினைத் தந்தது. ஒருநிமிடம் உலகம் மறந்துபோனான். பட்டென எழுந்து, போய்வருகிறேன் என சொல்லிவிட்டு வெடுக்கென தலையினைத் திருப்பி ஒரு அழகிய பார்வையை அவனை நோக்கி விட்டெறிந்துவிட்டு அழகு நடையில் நடக்கத் துவங்கினாள். அவளுக்கு எல்லாமும் அளவாகவே இருந்தன. அவனுக்கு என்ன செய்வதென புரியாமல் அவள் பின்னே நடந்தான்.

Thursday 3 January 2013

அடுத்தொருமுறை சொல்


உன் வார்த்தை ஜாலங்களில்
கள் குடித்த வண்டாய் மயங்கும் நான்...
உன் சில நேர அலட்சியத்தால்
அனலில்லிட்ட புழுவாய்
துடித்து தான் போகிறேன்...!

குற்றால சாரலாய் மழலை குறும்பால்
சிலிர்ப்பிக்கும் சாகசம் புரியும் நீ...
சில சமயம் வெந்நீர் குளியலென
கொதிக்கும் கொப்பறைக்குள்
தள்ளி விட்டு வேக வைக்கிறாய்...!

உன் சிறு நேசம் வேண்டுமெனக்கு
உப்பு பெறா விஷயமென சட்டென
அலட்சியம் காட்டுகிறாய்
கடுகளவும் என் துடிப்பறியாமல்...!

பட்டாசு சிதறலாய் வெடிக்குமென்
வார்த்தை ஜாலங்களை அண்ணாந்து
ரசித்து விட்டு சில நேரம்
நீரூற்றி அதை நீர்பிக்க செய்து
என் அழுகை ரசித்து ருசி காண்கிறாய்...!

உன் தேடல் துவங்கும் நேரம்
என் உள்ளங்கை அணைப்புள்
அடைக்கலமாகும் நீ
பதறியே விலகியோடுகிறாய்
உன்னை நான் வேண்டும் பொழுதெல்லாம்...!

உன் கட்டை விரல் ரேகையாய்
உறைந்திருக்க வரமொன்று வேண்டுமெனக்கு
சுட்டு விரல் காட்டி விலகிப்போவென
மவுனமாய் சுட்டி உயிர் வதைக்கிறாய்...!

உன்னிடம் நான் வேண்டுவது
உன் வாழ்நாளையல்ல...
எனக்கென ஆயுள் நீட்டிக்கும்
உன் சின்ன புன்னகையை...
ஒரு சிறு கையசைப்பை...
சிறிதே சிறிது அக்கறையை...
கொஞ்சம் என் மனம் சொல்லத் துடிப்பதை...!

தொடர்ந்து செல்லும் உன் வழிப்பயணத்தில்
நீ திரும்பிட வேண்டாம்...
திரும்பி ஒரே ஒரு புன்னகை
அடிக்கடி வீசி விட்டு போ...!

யாசித்து யாசித்தே ஓய்ந்து விட்டேன் நான்...!
மீண்டும் நினைவூட்டினால் என்னை
மனம்பிறழ்ந்தவள் வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால் சதுரங்கமாடுவாய்யென
மவுனமாய் நானும் மரணித்தே போகிறேன்...!


இன்றாவது புரிந்துகொள் தோழா
நீ விரும்பும் அதனினைவிடவும்
நட்பு மிகவும் இனிமையானது
அனுபவித்து அடுத்தொருமுறை சொல்.

Wednesday 2 January 2013

ஏமாற்றத்தின் சுவடுகளை


காதல் மனம், கடல் உருண்டது,
கவிதை, நினைவலைகள் பரப்பி.

ஓரலை கொண்டு நின்றது
கசப்புகளைச் சுமந்து.

மன்றொன்று சொல்லிச் சென்றது
ஏமாற்றத்தின் சுவடுகளை.

வெளிப்பட்ட இன்னொன்று
வெறுமையினை உணர்த்தியது.


கடுமைகாட்டிக் கலந்து வந்ததொன்று
கண்ணீரையும் கவலையையும்.


ஆனாலும் எதிர்பார்ப்போ
உயிர் கலத்தலை செய்யாதோவென.