Monday 20 February 2012

அது ஒரு கனாக்காலம்


தடுக்கிவிழுந்ததென்னவோ
வாழைக்காட்டினில்,

நிலைதெளிந்து பள்ளத்தாக்கினை
பார்த்துக் கடந்தெழுந்து,

அணை கொண்டு, நிரம்பின
தேன்குளத்தினில் நீர்பருகி,

மலைகளைக் கசக்கி குதித்துக்
குமமாளமிடவே ஆசை.

மனம் கசங்கிக்
குழம்பின நிலையில்
மலரையே சிதைத்திருக்கின்றேன்.

Saturday 18 February 2012

இரவு நேர பூபாளம்..

என்னுள் உருகும் நினைவெடுத்து -அதில்
மின்னல் ஒளியை கோத்தெடுத்து
ஈரச்சிறகை விரித்து
ஏகாந்தமாய் பறக்கின்றேன்.

கனவு நீருக்குள்ளே
கைவிரல் விட்டுத் தேடியெடுத்த
காகிதமொன்றில்
கடிதம் வரைகின்றேன்.

சதைபோத்திய எலும்புக்குள்
சங்கீதங்களின் ஒளியை
சப்த நாடியையுமடக்கி
சலசலப்பை மட்டும் உணர்கின்றேன்.

கானகத்தின் மரத்தடியில்
கருவேலங் காட்டுக் குயிலின்
கானக் குரல் கேட்டதுபோல்
கண்மூடி ரசிக்கின்றேன்.

இரவு நேர பூபாளம்
இதய நாளத்தை இசைமீட்ட
இதழோரப் புன்னகையால்
இனம் புரியாமல் சிணுங்குகின்றேன்.

இருளின் மொழிபெயர்ப்பை
ஒளிகள் உள்வாங்க
இரகசிய மொழிதனிலே
ஒளிந்து விளையாடுகின்றேன்..

Wednesday 1 February 2012

உணர்ந்தேன் - நட்பிலும்....

தோல்வி தான் முடிவு
என்று தெரிந்தும்
தோற்கும் துணிவில்லை எனக்கு...

ஆகையால்.....

தோல்வியே தழுவாத
தோழமையில் தொடர்வேன்
உன்னுடன் என்றும்...... 

 

என்னை கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியையும்
வென்றுவிட முயல்கிறேன்.....

ஆனால்....

எத்தனை முயன்றும்
இந்த நொடியும்
உன் நினைவுதான்
கடந்து செல்கிறது
என்னை
கடத்தி செல்கிறது.........

விளைவு....

ஒரு நிமிடம்
உன்னை மறக்க முயன்றதிலே
தோற்றேன்...... 

 

நான்
அழுகின்றேன்...

நீ
அருகே இல்லாவிட்டாலும்...

உன் விரல்கள்
என் விழி நீர்
துடைக்க கண்டு..

உணர்ந்தேன்..

நட்பிலும்

தாய்மையின் அடையாளம்
உண்டுயென... 

 

"ஆசையே துன்பத்திற்கு காரணம்"

என்றால்.......

துன்பமில்லா வாழ்விற்கு
ஆசைப்படுவதும்
துன்பம் தானோ????!!!