Wednesday 24 April 2013

உன் நினைவோடு


சிறகுகள் இருந்தும் பறக்கவில்லை
உறவுகள் இருந்தும் பகிர்ந்ததில்லை
வார்த்தைகள் இருந்தும் பேசவில்லை
உன் அன்பும் துணையும் கிடைக்கும் வரை

இதுதான் வாழ்க்கை என்றிருந்தேன்
இதுமட்டும் வாழ்க்கையில்லை என்றுரைத்தாய்
எதையும் சிந்திக்கும் தெளிவை தந்தாய்

நீ யாரென்று சிந்தித்தேன்

என்னை காக்கும் தாயா ?
போதிக்கும் புத்தனா ?
நேசிக்கும் கணவனா ?
நான் யாசிக்கும் காதலனா?
அன்பை பகிரும் சினேகிதனா ?
நான் கொஞ்சும் குழந்தையா?
வழிகாட்டும் தந்தையா?

இவையாவும் நீயென உணர்ந்தேன்

உன் மூச்சுக்காற்றை மட்டும்
என்னில் தரவில்லை
உன்னுள் இருக்கும் உன்னை
என்னில் தந்தாய்
நீயாக நானிருப்பேன்
நம் மூச்சோடு வாழும்வரை
உன் நினைவோடு கை கோர்த்து நடக்கையில்
அலைகளும் என் மனதை போல்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது .

உன் காலடி தடத்தை தேடி களைத்த
என் மனம்
உன் நினைவின் தேடலில் சிலிர்த்தது.

கரையை தீண்டிகொண்டே இருக்கும்
அலைகள் போல்
என் மனமும் உன் நினைவை
ஒவ்வொரு நொடியும் தீண்டிச்செல்லும் !


அலைகள் கரையில் கவிதை பேசிக்
கொஞ்சிச்சிரித்தபின் ஆழ்கடலினுள்
அமைதியாய் உறங்கிவிடுகிறது.

உன் அன்பின் அலைகள் உதிரத்தினுள்
உராய்ந்து களித்தபின்,ஆழ்மனக்
கடலினுள் விழித்துக்கிடக்கின்றது.

Tuesday 23 April 2013

அவன் கிராமத்தான்தான்


அது ஒரு மோபெட்தான். ஓட்டுனரின் இருக்கையினைத் தவிர மற்ற எல்லாப் பகுதியிலும் ஏதாவதொரு பெட்டி அடுக்கப்பட்டிருக்கும். மொத்தம் பெரிய பெட்டிகள் 4, பக்கவாட்டில், சிறிய பெட்டிகள் 8, உயரவாக்கில் அடுக்கிக் கட்டப்பட்டிருந்தன. சிறுசிறு தொழில் செய்திடும் ஆண் மற்றும் பெண்கள் புதிதாகத் தயாரித்து, விற்பனை செய்திட முடியாமல் தினரும் பொருட்களை கடைகடையாய் கொண்டு சென்று விற்பனை செய்திடும் ஒரு வியாபாரி அவன். காலையில் எடுத்துவரும் சாமான்களுக்கு மாலையில் பணம் தந்திடுவான். அவனுக்குரிய லாபம் 30% மட்டுமே. கூடவும் விற்பதில்லை குறைவாகவும் கொடுப்பதில்லை. எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருந்தான். நெல்லிக்காயின் ஊருகாய், மிட்டாய், ஜூஸ், இப்படி எல்லாவகைப் பொருட்களும் இடம்பெரும்.
ஒரே ஜீன்ஸ் பேன்ட்தான் உண்டு. பார்க்கையில் சுத்தமாக ஒரு கிராமத்துவாடை வீசினிற்கும் அவனிடம். பெரும் உழைப்பாளி. ஆனால் அவன் கிராமத்தானாக இருப்பினும் பியெஸ்ஸி, எம்பிஏ படித்தவன். வெளிநாடு செல்லும் எண்ணமும், ஆங்கில ஆசிரியரின் வற்புறுத்தலும் இருந்ததால் ஸ்போகன் லேங்க்வேஜ் நன்கு கற்றுத் தெரிந்துவைத்திருந்தான். ஆனால் படித்ததும் வேலை கிடைக்கவில்லை. 3 மாதங்கள் சுற்றியலைந்தான். ஒரு உயர்தர பள்ளியில் வாத்தியார் வேலை கிடைத்தது. மாதச்சம்பளம் 2500 என்றார்கள். உதறிவிட்டு, அப்பாவின் மோபெட்டை வாங்கிக்கொண்டு தொழிலைத் துவங்கியவந்தான். இப்பொழுது 6 வருடங்கள் ஓடிவிட்டன. தினமும் வருமானம், செலவுபோக 2000 ரூபாய் நிற்கின்றது. அதற்குமேல் அவன் ஆசைப்படவுமில்லை.
ஒரு நாள் ஒரு முக்கியமான சூப்பர்மார்கெட்டுக்கு விற்பனைக்கு செல்லும்வேளையில் ஒரு மெர்சிடிஸ் பென்ஃஸ் காரொன்று நிற்பதைக்கண்டான். நிச்சயமாக ஒரு பெரிய நிறுவன முதலாளியின் காராகத்தான் அது இருக்கவேண்டும். உள்ளே சென்று தன் தொழிலை செய்துகொண்டிருந்தான். அந்தக் கேபினில் எல்லொரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான். மேலும் எல்லொரும் அவனைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்வதையும் உணர்ந்தான். ஒரு சிப்பந்தி அவன்னொக்கி ஓடிவந்து, முதலாளி தன்னை கொஞ்ச நேரம் இருக்குமாறு சொன்னாரென்று சொல்லிச்சென்றான். அவன் காத்திருந்தான். ஒருமணி நேரம் ஓடிவிட்டது. என்னவாக இருக்கும் என்று மனம் பதபதைத்தது.
நிறுவன முதலாளியும், சூப்பர்மார்கெட் முதலாளியும் வெளியில் வந்தார்கள். அவனை மற்றவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்கள். அவனிடம் தங்களோடு மதிய உணவுக்கு வரும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். மோபெட்டை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றான். அது ஒரு ஸ்டார் ஹோட்டல். பஃப்ஃபேமுறை உணவு. முதல்முறை என்பதால் என்ன செய்வதென புரியாமல் பிடித்த, சுவையான உணவுகளனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டான். நிச்சயமாக இரவு உணவு தேவையிருக்காது, எனத்தோன்றியது. உணவுமுடிந்து மூவர்மட்டும் அமர்ந்து பேச்சைத் துவக்கினர். பெரிய நிருவன முதலாளிதான் பேச்சைத் துவக்கினார். என்ன படித்திருக்கின்றாய் எனக்கேட்டதற்கு, சொன்னான். பின்னர், “ உன்னுழைப்பைப் பற்றி கேள்விப்பட்டேன். நன்கும் படித்திருக்கின்றாய். இந்த ஊரில் ஒரு ஹோல்சேல் யூனிட் துவங்கலாம் என்று முடிவுசெய்திருந்தோம். உனக்கு விருப்பமிருந்தால் நாம் பங்குதாரர்களாய் அந்தத் தொழிலைத் துவக்கலாம் என்றிருக்கிறேன். மொத்த பணமும் நானே போட்டுவிடுகிறேன். மொத்தபொறுப்பையும் உங்கையில்கொண்டு நல்லமுறையில் தொழிலினை நடத்திடவேண்டும். உனக்கு 50% பங்கு, எனக்கு 50% பங்கு. தீரயோசித்து முடிவெடுத்து சொல்.” என்று சொன்னார்.
அவனும் அதைக்கேட்ட மாத்திரத்தில் உடனேயே சரியென்று சொல்லிவிட்டான்.
இப்பொழுது மேலும் பத்துவருடங்கள் கழிந்து, அது அந்தப் பெரிய க்ரூப் கம்பெனியின் போர்ட்மீட்டிங்க்கின் சமயம். மொத்தம் 6 தொழிர்ச்சாலைகள் அதில் அடக்கம். அவன் நிர்வாக இயக்குனர், அந்தப்பெரியவர் சேர்மன்.   

Friday 19 April 2013

உனக்காக செய்தி


தேடி தேடி
பூத்துப் போன கண்களும்
எண்ணி எண்ணி
தேய்ந்து போன சிந்தையும்
உனக்காக செய்தி அனுப்பி அனுப்பி
மரத்துப் போன விரல்களும்
என்ன செய்வது?
இன்னும்
எத்தனை காலம் இப்படியோ?.....


ஒரு முறை கூட
உன்னை நினைக்க மாட்டேன்
என்று சொல்லி சென்றாய் வீறாப்பாக....

ஆனால் இப்போதுதான்
நீ என்னை அதிகமாக
நினைக்கிறாய்
என்று
எனக்கு வரும்
கணக்கில் அடங்காத
விக்கலை வைத்து
தெரிந்து கொண்டேன்
உன்னை பற்றி.....


மனம் மயக்கும் சிறு தூறல்...
கொஞ்சம் குளிர் தரும்
மெல்லிய தென்றல்....

கண்ணுக்கும் சிந்தைக்கும்
இனிமையாய் மல்லிகை கொடி....

எண்ணத்தில் இனிமை கூட்ட
சுவரில்
இளம் நீல வண்ணம்.....

இத்துடன்
பால்கனியில் வட்ட வடிவ மேஜையில்
ஏலக்காய் போட்ட தேநீர் கோப்பையுடன்
வாசனை நிறைந்த
உன் அருகாமை...

மாலை நேரத்தில் சந்தோஷமா?
அல்லது
சந்தோஷத்துடன் மாலை நேரம் வந்ததா?



Thursday 11 April 2013

உன் வாசம்


விண் எனும்  இறையில்
விரவிக்கிடக்கும் மின்துகளாய்,
நீரினுள் ஊறிக்கிடக்கும் மீனாய்,

என் கவிதைக்குளத்தினுள்
காலம் காணாமல் கரைந்திடும்
ரகசியமாய் உன்னின் நீச்சல்.

ஒட்டிக்கிடக்கும் உன்வாசமே,
உருகியோடிடும் உன்சுவாசமே,
உள்ளதைச் சொல்லும் உன்னுள்ளமே.

கனவினில் நினைவைத் தெளித்தவுடன்
பளிச்சென விக்கல்வரும் உனக்கு,
பொருமல் வராமல் பார்த்துக்கொள்.


பொறுத்துப் பொறுத்து இருந்திட்டாய்,
பொறுமையின் எல்லையினைக்
கடந்திட்டாய், புண்ணியமாய் போகும்,

புதுவிதமாய் வாழ்வு மாறிடும்,
மூளையினை தீட்டுகிறேன்,
மறுமுறை குழல்விளக்காய் மாறாதிருக்க.


மௌன மொழி உரைக்கின்றாய்,
கண்களாலே கவிதை செய்கின்றாய்,
நம் தனிமைகளைத் தவிர்க்கின்றாய்,

தொண்டைவரை கொண்டவரை,
வந்தவரை மனம் நொந்தவரை,
சென்றவரைப் பின் வென்றவரை,

மறைவினில் மடியினில் கிடத்தி,
மலர்மஞ்சமாக காதல்மணம் பரப்பி,
ரத்தத்தை அத்தம்வரை கிள்ளுகின்றாய்.

உயிரைத் தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் உண்டென்றால் வந்துசெல்.
இல்லை, கண்டெடுத்தால் இன்றுகொள்.

Tuesday 9 April 2013

பூமியும் பெண்ணும்


காட்டின் கதவுகளூடே
கசிந்துநின்ற ஒலிச்சிதரல்களில்
தன்னிசை மொழியினை
உரத்திக் கூறியது குயில்.

அங்கொரு மானின் அலறல்,
மறுபடியும் ஒரு உறுமல்,
மறுகோடியில் கூட்டக் குரைப்பு,
குலையையறுக்கும் ஓயா உரவி.

பசுமையின் அடர்த்தி,
குளிர்ச்சியின் உச்சத்தில்
ஒய்யாரமாய் ஒரு கூடாரம்,
மஞ்சத்தின் இனிமையில் காதலி.

பூமியுடலில் ஊன்றிய வேர்,
ஓங்கிவளர்ந்து மரமாய் உயிர்த்து,
பூத்துக்குலுங்கி, விதையெனும்
உயிர்க்குழந்தை மறைத்துத்தரும் கனி.

வேர்கொண்ட பூமியிங்கே
உயிர் வளர்க்குது மரத்துக்குள்.

பூதவுடல் புகுந்த வேர்,
ஊற்றி மறைந்த உயிரை
பேணிக்காத்து கற்பமுடன்
கண்காட்டுது கனிந்த பெண்மை.

உயிர்கொண்ட பூமியிங்கே
மழலை வளர்க்குது தனக்குள்ளே.

பூமிப்பெண் வேரைக்
கற்பமுறச் செய்கிறாள்.
பூதப்பெண் வேர்கொண்டு
தானே கற்பமுறுகிறாள்.

Thursday 4 April 2013

இதுதான் ஜென்மசங்கல்பமோ


அதிகாலை மணி 4க்கு பட்டென விழித்துவிட்டான். அது அவள்பற்றின அருமையான கனவுடனான விழிப்பு, அதனால் அவனினுள் இன்ப அதிர்வுகள் முழுமையாய் ஆக்கிரமித்திருந்தன. அவனால் அவள் அவனினுள் இருப்பதினை ஒவ்வொரு நொடியும் உணரமுடிந்திருந்தது. ரத்தத்தின் அணுக்களில் அவளின் துடிப்புகள். தசைகளின் உள்ளே அவளின் ஸ்பரிசம். முறுக்கி நின்ற நரம்புகளின் ஊடே வழிந்த காந்தத்தில் அவளின் உரசல்கள். எல்லாமுமாக சேர்ந்து அவனை மொத்தமாக ஆனந்தமாய்க் கூத்தாடிக் கிடந்தன. சரி, குளிக்கலாம் என்று எண்ணி அந்த வீட்டின் முன்னிருந்த நீச்சல்குளத்தில் குளிக்க இறங்கினான்.
இன்னும் அவள் அவனினுள்தான் இருந்தாள். அதை அவனால் மிகத் தெளிவாக உணரமுடிந்தது. கண்களை மூடினான். ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து நீரினுள் மூழ்கி அப்படியே மிதந்தான். உடலின் அத்தனைத் தசைகளின் இருக்கத்தினையும் தளர்த்தினான். இப்பொழுது அவனால் மிகத்தெளிவாக உணரமுடிந்தது, அந்தக் குளத்தின் நீர்முழுவதுமாக அவள் கரைத்து நிரப்பப்பட்டு பரவிக்கிடந்தாள். அதில் அவன் மிதப்பதினைப்பொல் இருந்தது. அதாவது அவளினுள் ஒரு அணுவாக அவன் சுற்றிக்கொண்டு மிதக்கின்றான். அந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கு கலவியின் உச்சஇன்ப அதிர்வுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.
இப்பொழுது அணுவினைப்போல் இருந்த தனக்குள்ளேயே உட்ச்சென்றான். இன்ப அதிர்வுகள் பலமடங்கு கூடினின்றது. மேலும் அவள் இப்பொழுது ஆகாயம் முழுமைக்கும் பரவிவிட்டிருந்தாள், அளவிடமுடியாத அளவுக்கு. அவன் இன்னமும் அந்தச் சிறிய அணுவாகவே, அதேயளவு பேரின்பத்தினை அனுபவித்துக்கொண்டே மிதக்கிறான், தேவையான பொழுது மூச்சினைமட்டும் வெளிவந்து இழுத்துக்கொண்டு. பலமணி நேரம் இது தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. நீச்சல்குளத்திலிருந்து வெளிவர மனமில்லாமல் இன்பத்தினை அனுபவித்துக்கொண்டே இருக்கின்றான்.
வீட்டினுள்ளேயிருந்து தோழியின் சத்தம் கேட்டது. “ எவ்வளவு நேரம்தான் தண்ணிக்குள்ளேயே கிடப்பீர்கள்” என்று. அப்படியே வெளியேறி நிலைமாறாமல் அமைதியாக அறைக்குள் சென்றான்.
இதுதான் தியானமோ என்னவோ? இன்னும் அவள் அவனினுள்ளிருந்து வெளிவரவில்லை. அவனால் அவளை வெளியேற்ற அனுமதிக்கவும் முடியவில்லை. அவனுக்குள் அவளா அல்லது அவளுக்குள் அவனா, உணரவும்முடியவில்லை. ஜென்மசங்கல்பமாக இருக்கலாமோ. அனுபவித்த “அதுதான்” கடவுளோ. எப்படியாயினும் புரிந்துகொண்டுவிட்டான், இப்பிறவிப்பயனை.

Monday 1 April 2013

உயிரோடு உரசின உயிர்


படுத்துத்தான் கிடக்கிறேன்
கண் உறக்கமுமில்லை,
அது கனவுகளா நினைவா
பிரித்துணரவும் முடியவில்லை...

எட்டுமணி உறக்கம் நாளும்
தேவையாம், மருத்துவர்கள் உரை.
எட்டாத உறக்கத்தை கூட
நினைவில் கொள்ளமுடியாமல் நான்...

ஆனாலும் அலுப்புமில்லை,
விட்டெழ விருப்புமில்லை,
மதமதப்பில் விளைந்த ஒரு,
ஆனந்தக் கதகதப்பு.....

திகட்டிடுமே இந்த இனிப்பும்,
நின்றிடுமே அந்த ஆரவார
ஐம்புலன்களின் சிரிப்பும், காலம்
மறைந்து இனித்திடுமே கனிக்காதல்...

ஆருயிர் காதலி ஓருயிராய்,
அதனினுள் ஆழ்ந்துறங்கும்
எழும்பும், சதையும் பிணைந்து
இறை செய்யும் மருந்து, மறந்து.....

நெனவுகளுள் கனவாய்
மூழ்கி மூழ்கி மிதக்கிறாய்...
நினைத்தால் தியானமாய்
மரூவி மரூவி மலர்கிறாய்.....