Thursday 28 February 2013

உயிர்கொடுத்த உறவு...


அழகாய் ஒரு கூடு, அந்த வேம்பின் உச்சியில். அதில் உற்சாகமாய் இரு மைனாக் குஞ்சுகள். அம்மா இரைகொண்டுதர எதிர்பார்த்து நாள்முழுவதும் வாய்பிளந்து அவைகளின் இன்பக் கொண்டாட்டங்கள். களுத்தை நிறுத்த முடியாது ஊஞ்சலாட்டத்தில் நிற்கும் அந்த ஒரு குஞ்சியின் போட்டி போடும் அந்த உத்வேகம். வேலையென்னவோ உணவு உண்பதுமட்டுமே. காட்டுக்காற்றுக்கும், ஆடும் கிளை ஆட்டத்தின் அலைவுக்கும், கனலாய் சுடும் சூட்டுக்கும் கற்றுக்கொண்டுவிட்டன. அவைகளின் இப்போதய குறிக்கொள் ஒன்றுமட்டும்தான், உணவு. அதைத்தரும் தாயும், தந்தையும். மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவிடும் அந்த பூச்சி இனங்களும் அவைகளின் புழுக்களும்தான் அந்த உணவு. அந்தத் தாய்க்கும் தந்தைக்கும் முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்கவைத்து பின் தன் குஞ்சுகளை வளர்த்து அவைகள் பறந்து பழகும்வரையிலும் அவைகளுடன் இருந்து பாதுகாப்பது. இதுவே ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் இட்டிருக்கும் கட்டளை, மனிதன் தவிர. அதாவது எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தன் இனத்தினைப் இனவிருத்திப் பெருக்குவது.
அப்படித்தான் அவைகள் இறைவனின் கட்டளைக்கேற்ப தன் குஞ்சுகளை வளர்த்து வந்தன. அவைகளை பாம்புகள், பருந்துகள், காக்கைகள் போன்ற தன் எதிரிகளிடமிருந்தும் கண்ணுற்று காப்பாற்றிடவும் வேண்டும். மைனாக்கள், சிறிய உடலமைப்பினைக் கொண்டிருப்பினும் அவைகள் மிகவும் தைரியம் கொண்டவை. எந்த எதிரிக்கும் பயப்படுவதேயில்லை. ஒருமுறை ஒரு நாகம் மரமேறின பொழுது, பறந்துபறந்து தாயும், தந்தையும் அதை பரமேற விடாமல் கடைசியில் அதன் கண்களில் கொத்துகொத்தென கொத்தி அது இறந்தே போக வழிவகுத்தது. இப்படியாக அவைகளின் இன்ப வாழ்க்கை இனிதே சென்றுகொண்டிருந்தது.
ஒரு அதிகாலை நேரம் ஒரு லாரியிலிருந்து கொட்டிக் கிடந்த அந்த தானிய வகைகளை பொறுக்க ரோட்டின் கரைகளில் பறந்து கிடந்தது அந்த தாய் மைனா. அதிகாலையின் மயக்கத்தில் அரைமனதுடன் செய்திருந்த அந்த வேலையில் க்ஷண நேரத்தில் பாய்ந்துவந்த அந்த விலையுயர்ந்த பென்ஸ்காரில் அடிபட்டேவிட்டது. ரோட்டின் விளிம்பில் அது துடித்துக்கிடந்ததை அதன் ஆண்துணையினாலும் ஒன்றும் உதவிட முடியவில்லை. அதன் கண்முன்னேயே அந்த மரணம் நிகழ்ந்து முடிந்தது. வேதனையை சுமந்த ஆண் அந்த ரோட்டினைக் கடக்க முயன்ற நிலையில் ஒரு பேருந்தில் மாட்டி அந்த இடத்திலேயே அதுவும் மரணித்தது.
கூட்டில் வாழ்ந்த இரண்டு குஞ்சிகளில் ஒன்று மிகவும் இளையது. சொல்லப்போனால் அதற்கு இரக்கையின் சிறகுகள்கூட இன்னும் முளைத்திடவில்லை. மற்றது கிட்டத்தட்ட முழுவடிவமும் அமையப்பெற்றது. தாயும், தந்தையும் இறந்த அந்த நாள் முழுவதும் அந்தக் குஞ்சுகளுக்கு உணவு தரப்படவில்லை. சிறிய இளைய குஞ்சு மிகவும் வாடிய நிலையில் இருந்தது. பெரியது கொஞ்சம் தெம்பாகவே இருந்தது. கலக்கமாக மட்டுமே குடிகொண்டு இருந்தது. மறு நாளும் தாய்தந்தையைக் காணாததால், கூட்டிலிருந்து பறந்து செல்ல முடிவெடுத்து ரெக்கையினை அடித்து பறக்கத் துவங்கியது. படபடவென பதற்றத்துடன் பறந்து அடுத்த மரம்வரையிலும் நன்றாகவே பறந்தது. கிளையில் அமர எத்தனித்த பொழுதுதான் தவறு நிகழ்ந்தது. அப்படியே கீழே விழுந்துவிட்டது. பின் எவ்வளவோ முயன்றும் அதனால் பறக்கமுடியவில்லை. அந்த வழியில் சென்ற ஒரு சிறுவன் அதைக் கண்டு அந்தக் குஞ்சியினை தூக்கி ஒரு சிறு கிளையின்மேல் அமர்த்திவிட்டான், ஒரு வலுவான கொத்து ஒன்றினை பெற்றுக்கொண்டே.
இப்பொழுது அதிகமான பயத்துடன் மேலெழுந்து பறக்கத்துவங்கியது. மிதக்கத்துவங்கியது. சுவற்றின்மேல் அமர்ந்து பழகியது. பலமுறை பழகிக்கொண்டு கூட்டிற்கு வந்துசேர்ந்தது. அங்கு மயங்கின நிலையில் இருந்த சிறுகுஞ்சி இப்பொழுது பட்டென தன் தாய்தான் வந்துவிட்டதென எண்ணி தன் மஞ்சள் கலந்த சிவப்பு வாயை பிளந்து காட்டி உணவு எதிர்பார்த்து நின்றது. பெரிய குஞ்சிக்கு இப்பொழுது அதன் தம்பி உயிருடன் இருப்பதுகண்டு சந்தொஷமாகியது. அவனுக்கு உணவு தேடி காட்டினுள் சென்றது. அப்பொழுது ஒரு எலுமிச்சை மரத்தினூடே அதிகமாக புழுக்கள் நெளிவதைக் கண்ணூற்று, அவைகளில் நன்றாக பருத்த புழுக்களை கொத்தியெடுத்துக் கொண்டு கூட்டை நோக்கி பறந்தது. தன் தம்பிக்கு அவற்றைக் கொடுத்தது. கொத்திய புழுக்களை அந்த சிறிய குஞ்சு படக்படக்கென விழுங்கி தன் பசியினை ஆற்றிக்கொண்டது. தன் அண்ணனைக் கண்டு சந்தோஷப்பட்டது. அண்ணனும் தம்பி உணவு கொண்டதும் தன்பசி தீர்க்க பறக்கத் துவங்கியது...

No comments:

Post a Comment