Friday 4 January 2013

காதலின் நிலை


நாம் சிறந்த நண்பர்கள்தாம் ஆனாலும் நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் காதலுக்கு இடமளித்துவிடக் கூடாது. நம் சந்திப்பில் நாம் தொட்டுப் பேசிக்கொள்தல் கூடாது. சம்மதமானால் நாம் சந்திப்பதைப்பற்றி முடிவு செய்யலாம் என்றாள் வலையில், அரட்டையில் இருந்த அவள். அவனும் சரியென்றான். எல்லா ஆண்மகன்களும் சொல்லுவதுதானே. சந்திப்புக்கு தேதியும் இடமும் முடிவு செய்யப்பட்டது. அதாவது அவளின் கல்லூரி வளாகத்தினுள் ஒரு உள்விளையாட்டரங்கம் உள்ளது, அங்கு சரியாக மாலை 4 மணிக்கு சந்திப்பதென.
இருவருக்குமே அன்றைய பாடத்தில் அக்கறை இல்லாமல் போனது. இருவருக்குமே மதியஉணவு தேவைப்படவில்லை. அவள் அவளுக்குப் பிடித்த பச்சை நிற சேலையில் வந்திருந்தாள். அவன் இளஞ்சிவப்பு. மாலை 4 க்கு வழக்கமான ஆணினம்போல் அவன் அரங்கத்தினுள் நுழைந்தான். வழக்கமான பெண்ணினம்போல் அவள் வரவில்லை. மேலும் அந்த அரங்கத்தின் மூலையில் ஒரு சிறிய ஜன்னலொன்று இருந்தது. சிலநேரங்களில் போக்கஸ் விளக்குப் பொருத்துவதற்காக போடப்பட்ட துளை ஜன்னல். அவள் அவனுக்கு தெரிந்துவிடாமல் கவனமாக அந்தத்துளைஜன்னல் வழியாக அவனை நோட்டமிட்டாள். அம்மாஞ்சி அழகாகத்தான் இருந்தான். ரசித்தாள். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. அவள் கவலைகொள்ளவில்லை. அவன் மிகவும் கவலைகொண்டான். இருமுறை வெளியில் சென்று அவளைத் தேடினான். அவள் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். மணி 5.30. கடைசியில் அவன் வெறுத்துப்போய் கோபமாய் வெளியேற எத்தனிக்கும்போழுது அவள் உள்ளே நுழைந்தாள். அவனின் கோபம் நீரினுள் விழுந்த தீக்குச்சியினைப்போல் அணைந்தது.
இதுதான் அவர்களின் முதல் சந்திப்பு. நேருக்கு நேராய் பார்த்தாள். அவனால் முடியாமல் குனித்துகொண்டான். அவனால் அவளை நேருக்குநேராய் பார்த்திட முடியவில்லை. பின்னர் அருகருகே உட்கார்ந்து அங்கு நடந்துகொண்டிருந்த இறகுப்பந்துப் போட்டியினை ரசிக்க முயன்று தோற்றனர். தேவையில்லாத அத்தனைக் கேள்விகளும் அதற்கு தேவைப்படாத பதில்களுமாய் ஓடிக்கொண்டிருந்தது. சட்டென அவள் கொஞ்சம் அவனை நோக்கி நகர்ந்து அவனின் கைகளில் தன்கைகள் பதமாக உரசிக்கொள்ளும்படி பார்த்துக்கொண்டாள். அது அவனுக்கு வெதுவெதுப்பான எண்ணைசட்டியில் இதமாக விரல்கள் பட்ட சுகத்தினைத் தந்தது. ஒருநிமிடம் உலகம் மறந்துபோனான். பட்டென எழுந்து, போய்வருகிறேன் என சொல்லிவிட்டு வெடுக்கென தலையினைத் திருப்பி ஒரு அழகிய பார்வையை அவனை நோக்கி விட்டெறிந்துவிட்டு அழகு நடையில் நடக்கத் துவங்கினாள். அவளுக்கு எல்லாமும் அளவாகவே இருந்தன. அவனுக்கு என்ன செய்வதென புரியாமல் அவள் பின்னே நடந்தான்.

No comments:

Post a Comment