Thursday 31 January 2013

கொஞ்சம் ஆணவம் நிறைய அன்பு


அவளுக்கு தான் ஒரு பேரழகியென்று ஒரு அதீத கர்வம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும் அவள் தேவதையைப்போல் மிக அழகாகத்தான் இருந்தாள். கல்லூரியில் படித்த வாலிபர்கள் பலரும் அவளின் அழகில் சொக்கி நிலை தடுமாறியே இருந்திருக்கின்றார்கள்.
அவளின் தரிசனம் காண, நிலைமறந்து இன்னும் எவரும் அந்தச் சாலையை கடக்கும்பொழுது கவனக்குறைவில் விபத்தில் சிக்கிடவில்லை. கடவுளை தினமும் வேண்டிக்கொள்வாள் போலும். அவளை முதல்முதலாகப் பார்ப்பவன் மறுமுறையும் பார்க்க விரும்பாமல் திரும்பியதில்லை. கல்லூரி வளாகத்தில் அவளைக் கவர்வதற்காக நடக்கும் தினக்கூத்துக்கள், அவற்றை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம். அவள் எங்கு சென்றாலும் அந்த இடம் திருவிழாக் கூட்டம்தான். அவளை ரசித்துக்கொண்டே இருக்கலாம் நாள்முழுதும். அத்தனை அழகு. ஒருமுறை ஒரு கல்லூரி ஆசிரியர்கூட அன்புப் பெருக்கால் அவளுக்கு காதல் கடிதம் கொண்டு தந்திருக்கிறார். பின்பு அவள் அவன் கைகளில் சகோதரக் கயிற்றினைக் கட்டி சமாளித்திருக்கிறாள். அவளால்தான் அந்த ஊரில், ஏரியாவில் ஆண்களின் அழகு சாதனப் பொருட்களும், தலைக்கு அடிக்கும் கருப்பு மையும் விற்பனையில் அமோகமாய் இருந்திருக்குமோ என்னவோ. ஒருமுறை கல்லூரியின் அழகிப் போட்டியின்பொழுதுகூட மற்ற அழகிகளின் வேண்டுகோளுக்கிணங்க போட்டியில் இருந்து விலகி விட்டிருக்கிறாள். இப்படி ஒரு உலகமே அந்த ஊரில் அவளைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருந்தாலும் அவள் யாரையுமே காதலிக்காமல்தான் இருந்துகொண்டிருந்தாள். அவள் நினைக்கும், எதிர்பார்க்கும் அந்த ஆணழகனை இதுவரையில் அவளால் காணமுடியவில்லை. அதற்காக அந்த ஊரில் அழகான ஆண்மகன்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது.
படிப்பிலும் அவள் புலிதான். CA படித்தல் அவளின் லட்சியம். பிகாம் 2 ஆம் வருடம் முடிந்தது. விடுமுறை நாட்கள் கழிந்து 3 ஆம் வருடம் துவங்கிய நாட்கள் அது. அவள் புதிதாக வாலிபால் விளையாட படித்திருந்தாள், விடுமுறை காலங்களில். பள்ளியின் பெண்கள் வாலிபால் குழு அமைக்க வீராங்கனைகளின் தேர்வு அன்று. அவளுக்கு இடம் கிடைக்கவில்லை. PD யின் அறைக்கு சென்றிருந்த பொழுதுதான் அவனைக் கண்டாள். அவன் யார்?
ஆறடி இருந்தான். ஆண் என்பதற்கான துல்லியமான அடையாளம் அவன்தான். நல்ல அழகுவேறு. எம்காம் 1 ஆம் வருடம் சேர்ந்திருக்கிறான். அவள் மனத்தை சிக்கச் சிக்க சிதரடித்தான். சில நாட்களாக அவனைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தாள். நல்ல கிரிக்கெட் வீரன் வேறு. அவளும் சிலநேரங்களில் நேரம்போகாத பொழுதுகள் கிரிக்கெட் பார்ப்பாள். கிரிக்கெட்டை பற்றி அவளுக்கும் கொஞ்சம் தெரியும். கேண்டீனில் ஒருநாள் சத்தமான சிரிப்புடன் அவன் அரட்டை அடிப்பதைக் கண்டாள். நல்ல அரட்டைப் பேர்வழி. கல்லூரியில் கிடைக்கும் நேரங்களெல்லாம் நூலகத்திலேயே கிடக்கிறான். அவன் ஒரு புத்தகப்புழு. அவளுக்கு அப்படியில்லை. இருவரும் காமர்ஸ் என்பதால் துறை அறையில் அடிக்கடி வலிய சென்று காணத் துவங்கினாள். இதுவரையில் அவன் அவளை காண ஒருமுறை கூட திரும்பியதேயில்லை, என்பது அவளுக்கு என்னவோபோல் இருந்தது. இவன் வித்தியாசமானவன்.
ஒருநாள் அவள் சில தோழிகளுடன் நடந்துசென்று கொண்டிருக்கும்பொழுது, அவனும் அவனின் சக கிரிக்கெட் தோழனும் எதிரில் வருவதைக் கண்டாள். நல்ல சந்தர்ப்பம். பயன்படுத்திட முடிவுசெய்தாள். அவன் அவர்களை நெருங்கினபொழுது, கொல்லென நக்கலாக சிரிப்பதுபோல் அவனைப் பார்த்து சத்தமாக சிரித்தாள். சரியாக அவன் நின்று, அவள் முன்வந்து "என்ன கிண்டலா, இந்த நக்கல் சிரிப்பெல்லாம் இங்க வச்சிக்கிடாத, ஏமூஞ்சியப் பாத்தா ஒனக்கு சிரிப்பா இருக்கோ?" என்று அரற்றிவிட்டு சென்றான். அவள் அப்படியே உறைந்து விட்டிருந்தாள். இரண்டு நாட்கள் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனை சந்திக்க பயந்தாள். இரவு தூங்கிடவும் முடியவில்லை. இதுவரையிலும் எந்த ஆண்மகனும் அவளிடம் இப்படி கடுமையாக பேசியதேயில்லை. இவன் என்ன பெரிய இவனோ? என்றுகூட கோபப்பட்டுப் பார்த்தாள். ஆனாலும் அவனின் நினைவுகளிலிருந்து அவளால் வெளிவர இயலவில்லை. அவனை காதலிக்கிறாள்.
அவளுக்கு சிலநேரங்களில் அவள்மேலேயே கோபம் வரத் துவங்கிவிட்டது. சிலநாட்களுக்குப் பின் கல்லூரி PD அறையின் முன் அவனைப் பார்த்தாள். அவன் கண்டுகொள்ளவில்லை. அவனிடம் நேராகச் சென்று, மன்னிப்பு கேட்டாள். மேலும் அன்று, தான் அவனைப் பார்த்து கேலியாக சிரித்திடவில்லை என்றும், தோழிகளின் அரட்டையின் பொழுது தன்னிச்சையாய் நிகழ்ந்த நிகழ்வுதான் அது என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. மற்றொரு முறை கேண்டீனில் சந்தித்தபொழுது அவன் அவளுக்கு காப்பி வாங்கித் தந்தான். இனித்தது. மாநில கிரிக்கெட் போட்டி அவர்கள் கல்லூரி வளாகத்தில் நடந்தபொழுது அடிக்கடி அவனை சந்தித்துப் பேசினாள். அவனின் திறமையாலேயே அந்தவருட கோப்பை அவர்களின் கல்லூரிக்குக் கிடைத்தது. அவனை வாழ்த்தினாள். கைகுழுக்கி விருந்து வேண்டும் என்று விளையாட்டாய் கேட்டாள்.
அவள் அவனுடன் மிகவும் அன்னியோனியமாக பழகுவதை உணர்ந்து அவன், ஒருநாள் அவளிடம் தனியாகப் பேசிடக் கேட்டான். அவள் ஆனந்தத்தில் துடித்துக் கிடந்தாள். சந்திப்பின்போழுது அவன் வழவழவென பேசாமல் நறுக்குத்தெரித்தற்போல் சொன்னான்," உன் மனநிலை நீ என்னை காதலிக்கிறாய்போல் எனக்குத் தெரிகிறது. அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் உன்னை காதலிக்கவில்லை. நாம் நண்பர்கள் மட்டுமே." என்று சொல்லிவிட்டு சரசரவென்று சென்றுவிட்டான்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளின் மனக்கண்ணில் ஒவ்வொருமுறையும் அவளை சுற்றிவந்த ஆண்களின் கூட்டம் கேலியாய் சிரிப்பதுபோல் வந்துசென்றது.

No comments:

Post a Comment