Monday 3 June 2013

மறக்க முடியவில்லை 1234

எனது பிறந்த நாள்
அன்று
ஒவ்வொரு கடையாய்
ஏறி இறங்கி
ஒவ்வொரு பொருளாய்
பார்த்து பார்த்து
எனக்கு என்ன பிடிக்குமென்று
கேட்டு கேட்டு
கடைசியாய் நீ வாங்கித் தந்த
பூ போட்ட கைக்குட்டையை
மறக்க முடியவில்லை...!

மணிக்கணக்கில் தினம் தினம்
கை கோர்த்து
பேசித் திரிந்த... ஆற்றங்கரை..!

காக்காய் கடி கடித்து
மாங்காய் தின்னும்...
பள்ளிக்கூடத்து ஆலமரத்தடி..!

கும்பலாய்க் கூடி
கூட்டாஞ்சோறு
ஆக்கித் தின்னும்...
உன் வீட்டுத் தோட்டம்..!

மணல் வீடு கட்டி விட்டு
மரப்பாச்சி பொம்மை வைத்து
நாம் ஒன்றாய் கூடி குதூகலித்த...
தென்னந்தோப்பு..!

அன்பே,

மறக்க முடியவில்லை - நம்
முந்நாள் உறவுகளை..!
உயிர் போனாலும்
துறக்க முடியாது...
எந்நாளும் - உன் பிரிவுகளை..!

பட்டாம்பூச்சி வந்து
என் மீது மோதினாலும்
வலிக்குமோ என்று
கலங்கிய நீயா - இன்று
பட்டாக்கத்தியாய் மாறி
என் இதயத்தைக் கிழித்தாய்..?
அந்த வலியின் வேதனையை
இன்னும் என்னால்
மறக்க முடியவில்லை...!

அனுப்புனர் முகவரி இல்லாமல்
நீ அனுப்புகிற
வாழ்த்து அட்டைகளையும்,
கிறுக்கலான கையெழுத்தில்
நிறைய இலக்கண பிழைகளுடன்
நீ எழுதி தந்த
காதல் கடிதங்களையும்
மறக்க முடியவில்லை...

No comments:

Post a Comment