Monday 24 June 2013

அருகில் வந்தால் இல்லையென்கிறாய்

நான் என் மனதில் ஒரு இனிமையான தாலாட்டினை உணர்ந்தது அன்றுதான். உன்னைப் பார்க்கவென்றே உன்னிடம் நான் வந்திருந்தபொழுது, உன்னோடு செல்லில் பேசினபொழுதெல்லாம் நீ எடுக்காததால், சில கருத்துக்களை எஸெமெஸ்ஸில் உன் செல்லுக்கு அனுப்பினேன். வழக்கம்போல நீ எந்த பதிலும் தரவில்லை. ஒருபுறம் பயம். எங்கே நீ யாரிடமும் இதை சொல்லிவிடுவாயோ என்றொரு கலக்கம். குழப்பமானால் என்ன செய்திடவேண்டும் என்றும் நான் யோசித்திருக்கவில்லை. மாட்டிவிட்டிருந்தாயானால், கிழிந்தது க்ரிஷ்ணகிரிதான். அந்த நாளுக்குப்பின் நாம் அனைவரும் ஒரு திருமணத்திற்கு வேறு செல்லவேண்டியதிருந்தது. அதற்காக சில உடுப்புகள் பார்க்கக் கிளம்பினோம். நீயும் வரப்போவதாக எல்லொரும் சொன்னதும்தான் மிகவும் திருப்தியானது. நீ யாரிடமும் பத்தவைக்கவில்லை என்ற திருப்தி. என்ன உடனேயே கோபமா? எனக்கு பொய்சொல்லப் பிடிக்காது. அங்கு போய் சேர்ந்ததும் உன் முகத்தைத்தான் முதலில் தேடிநின்றேன். வேண்டுமென்றே நான் உன்னைத் தேடிடவேண்டும் என்பதற்காகவே எங்கே உள்ளேயே மறைந்துகொண்டு என்னை, உன்னை தேடவிட்டாய். சிலநிமிடங்கள் கழித்து நீ என்முன் உன் வேலைநேர உடையுடன் தென்பட்டதும் மிகுந்த காதலில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். உன்னோடு என்னை உரசிக்கொள்ளவும் முடிந்தால் முத்தமிட்டுவிடவும் துடித்தேன். உன்கண்களிலுமே அதே விருப்ப அலைகளை நான் கண்டேன். மனம் இருப்புக் கொள்ளவில்லை. நீயும் கொஞ்சம் தொலைவில் உள்ள பகுதியில் நின்றுகொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய். நானும் உன்னருகில் வந்திட என்னவெல்லாமோ செய்து முயற்சித்தேன். ஆனாலும் நம் உறவுகள் அருகில் இருந்துகொண்டு சந்தேகப் பார்வைகளை நம் மீது வீசத் துவங்கியதால் அந்தக் கடையைவிட்டு வேறொரு கடைக்குச் செல்வதுபோல சென்றுவிட்டேன். மறுபடியும் வேறுவழியின்றி இன்னொரு அருமையான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டேன். அன்று வீட்டிற்கு சென்றபின்னும் மிகுந்த காதல் காய்ச்சலில் உழன்றேன். கண்முன் கட்டளையிடுகின்றாய். கருத்தொருமித்து அருகில்வந்தால் ஓடிவிடுகின்றாய்.

No comments:

Post a Comment