Friday 21 June 2013

நினைவில் தொழில்முறை 87

1987 ஆம் வருடம் தற்செயலாய் மாஞ்சோலை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது ஒவ்வொரு வருடமும் புதுவருடம் துவங்கும்வேளை தொழிலில் அவர்களின் எல்லா வாடிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லி புதுவருட டைரியை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவனே அதை முன்னின்று செயல்படுத்தத் துவங்கினான். மற்றெல்லா வாடிக்கையாளர்களையும் அவனே சென்று பார்த்தான். மாஞ்சோலை எஸ்டேட் மட்டும் அவனின் தகப்பனார் கவனிப்பதாக இருந்தது. அவன் அங்கு தனியே இதுவரை சென்றதேயில்லை.  இந்தமுறை அவனே அங்கும் சென்று முடித்துவிட முடிவானது. அவனும் சென்றான்.
அதிகாலை 3 மணிக்கு அந்த பஸ் கிளம்பும். அந்தக் காலங்களில் டவுன்பஸ் காலை 5க்குதான் செயல்படத்துவங்கும் என்பதால் முந்தயநாளே இரவு ஆட்டம் சினிமா ஏதேனும் பார்த்துவிட்டு அப்படியே பொடிநடையில் பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கு கடந்துசெல்லும் டிடிசி பஸ்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், மணி 3 ஆகிவிடும். உலகமே இருண்டாலும் மாஞ்சோலை செல்லும் அந்த பஸ்மட்டும் சரியான நேரத்திற்கு வந்து, கிளம்பிவிடும். 3.10 க்கு வந்தால் நிச்சயம் அந்த பஸ்ஸை தவறவிட்டிருப்பீர்கள். எங்குதான் நிற்பார்களோ தெரியாது, வந்துநின்ற மறுநிமிடம் அடிபுடியுடன் அத்தனைக் கூட்டமும் ஏறி கொண்டு பஸ் நிரம்பிடும். அப்புறம் ஸ்டாண்டிங்தான். நடைபாதைகளில் வரிசையாக மூட்டைகள் கிடக்கும். எல்லா பொருட்களும் கீழேயிருந்துதான் அங்கு சென்றிடவேண்டும். அவன் முதலில் ஏறிக்கொண்டு பஸ்ஸின் முன்கண்ணாடி அருகிலுள்ள சீட்டில் அமர்ந்துகொண்டான். அதுதான் வழியில் மிருகங்களை பார்த்துக்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பின் மணிமுத்தாறுவரை ஒரு குட்டித் தூக்கம். மலையேரும் இடம் நெருங்கியதும் வேடிக்கை பார்க்கத் துவங்கிடுவான். அந்த மலையே ஒரு அதியர்ப்புதம் நிறைந்ததுதான். மூலிகைகள் நிறைந்தது. மணிமுத்தாறு டேம் நீர் நிறைந்து கடல்போல் காட்சி தந்துகொண்டிருந்தது. அருவியிலும் அதிக அளவில் குளிக்கமுடியாதபடி நீர் கொட்டியது. வழியில் செந்நாய்களின் கூட்டம், யானைகளின் கூட்டம், மிளாக்களின் அழகிய அணிவகுப்பு என நிறைய பார்த்திருக்கிறான். ஒருமுறை காட்டெருமைகளின் கூட்டத்தினருகில் ஒரு பெரிய கரடியைக்கூட பார்த்திருக்கிறான். வளைந்துவளைந்து சென்று, மாஞ்சோலை நெருங்கையில் குளிர் துவங்கியது. தேயிலை மரங்களின் முடிவெட்டப்பட்ட பச்சைப்பட்டு, மொட்டைத் தோற்றம், கூட்டமாகப் பெண்களை படுக்கவைத்ததுபோல் மேடுபள்ளங்களுடன் அழகாக காட்சிதந்தது. பின் மாஞ்சோலை வந்தபின் பஸ்ஸை விட்டிறங்கி நடந்து, கெஸ்ட்ஹௌஸ் சென்று வெண்ணீரில் குளிக்கத் துவங்கும் வரை குளிர் கொன்றெடுத்தது. உணவுவகைகள் எல்லாமும் அங்கேயே தந்துவிடுவார்கள். கம்பெனிக் கேன்டீந்தான், அங்கு வேறு ஹோட்டல் எதுவும் கிடையாது.
சரியாக 9 க்குக் கிளம்பி க்ரூப் ஆபீஸுக்குச் சென்றான். அங்கு கம்பெனியின் " க்ரூப் மேனேஜர்" மீட்டிங்கில் இருந்ததால் அவன் சூப்பரின்டெண்டன்ட்டுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அங்கு ஒரு விசேஷம் என்னவெனில் நீங்கள் ஆபீஸில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு அரைமணிக்கும் உங்களுக்கு டீ தரப்படும். அது அவர்களின் வழக்கம். அந்த ருசி கொண்ட டீயினை உலகத்தில் எங்கும் உங்களால் சுவைத்திருக்க முடியாது. அவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கும். ஜிஎம் பிசியாக இருந்ததால் கொஞ்சம் வெளியில் நிற்கலாமென அவன் சென்றான். வெளியில் கடும்குளிர். மேலும் 100 மீட்டரில் அடர்ந்த காடுவேறு. விதவிதமான பறவைகளின் சங்கீதமும் மான்களின் கத்தல்களும் அவனைக் காட்டின் பகுதிக்குச் செல்லத் தூண்டியது. அங்கு ஒரு அழகிய புல்பாதை காட்டினுள் சென்றது. கொஞ்சம் தூரத்தில் ஒரு நீரோடையின் சத்தம் ஜல்லென இரைச்சலுடன் கேட்டதால் அதை நோக்கிச் செல்லத் துவங்கினான். வழியில் ஒரு செந்நாயைக் கண்டான். பின் நீரோடைவரை சென்று திரும்பினான். ஆபீசில் செந்நாயை கண்டதைச் சொன்னான். எல்லொரும் அவனிடம் செந்நாய் பற்றிய பயங்கரத்தை சொல்லினர். அதாவது செந்நாயை மட்டும் காட்டில் கண்டுவிட்டால் பெரிய ஆபத்தாகிவிடுமாம். செந்நாய் எப்பொழுதும் தனியாக இருக்காதாம். 30-40 சேர்ந்தேதான் திரியுமாம். ஒருநாய் கடித்ததும் எல்லாம் சேர்ந்துகொண்டு சுற்றிவளைத்து எண்திசைகளிலும் கடிக்கத் துவங்கி, நம்மை உயிருடனேயே ( உயிர் உடலைவிட்டுப் பிரியுமுன் ) தின்றுமுடித்திடுமாம். தப்பவே முடியாதாம். கதையைக் கேட்டதும் ஒரு நிமிடம் குலை நடுங்கியது. தப்ப ஒரே வழி, ஏதாவது அருகிலுள்ள மரத்தில் ஏறி எட்டாமல் அமர்ந்துகொள்ளவேண்டுமாம். நண்பர் ஒருமுறை இப்படி ஏறியமர்ந்து ஒரு பகல், ஒரு இரவு முழுவதும் மரத்தின்மேலேயே கழித்திருக்கிறார். பின் ஊர்மக்கள் வந்துதான் காப்பாற்றியிருக்கின்றனர்.  
ஜிஎம் மதியவுணவுக்குச் சென்றுவிட்டு மாலை 4 க்கு வந்தார். அவன் இப்பொழுது அவரைக் காண அவர் அறைக்குள் நுழைந்தான். அவர் பெயர் கன்வில்கர், பூனாக்காரர். ஆஜானபாகுவான உடலமைப்பு கொண்டிருந்தார். அவன் கல்லூரிநாட்களில் அவன் தோழனொருவன் ஸ்ரீலங்காவானதால் அவனுடன் பேசிப்பேசியே ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் பேசும்திறன் பெற்றிருந்தான்.
சம்பாஷனை இதுதான்:
" குடீவ்னிங்க் மிஸ்டர் ஜிஎம்...
----- யெஸ்... குடீவ்னிங்க்... கம்மின் ப்லீஸ்... ( கை குழுக்கிகொண்டோம்)
ஹவ்வார்யூ... வெரி க்லேட் டூ மீட் யூ...
----- ஐயாம் ஃபைன். டேக் யுவர் சீட், ப்லீஸ்....... சாரி. ஜஸ்டமினிட்...
சில நிமிடங்கள் கழிந்தன.....
--------- ஒகே...  யா டெல்மீ. யூ ஃப்ரம் வேர்?
ஐயாம் ஃப்ரம் ..................
-------- ஓ ஐஸீ. ஹௌயிஸ்த பிஸ்னெஸ்?
குட் செர். ஜஸ்ட் அ ஸ்மால் நியூயியர் கிஃப்ட் செர்.... ( டைரியினை அவரிடம் கொடுக்கின்றான். )
----- ஓ தேக்ஸ். இட்ஸ் வெரி நைஸ் அண்ட் யூஸ்ஃபுல், குட்.....
------ அனிதிங்க் எல்ஸ்?
செர் வீ டூ இண்டஸ்டிரியல்ஸ் மெட்டீரியல்ஸ் சேல்ஸ் ஆல்ஸொ, அண்ட் கேன் கிவ் குட்  அண்ட் ப்ராப்ம்ட் சர்வீஸ் டூயூ செர்.....
------ இசிட்! ஒன்செக்கண்ட் ப்லீஸ்......
( அவர் உடனேயே ஃபேக்டரி மேனேஜரை இன்டெர்காமில் அழைத்து, என்னை அவரை சந்திக்க அனுப்புவதாக சொல்லி, ஏதும் ஆர்டரிருந்தால் கொடுத்து உதவுமாறும் சொன்னார். )
ஒகே மிஸ்டர் .................. யுகேன் கோ அன்மீட் மிஸ்டர் ரிச்சர்ட், ஃபேக்டரி மேனேஜர். ஹீவில் ஹெல்ப்யூ.
தேங்க்ஸ் செர். பைசீயூ....
வெல்கம்.... ( மறுபடியும் கைகுழுக்கல். )
வெளியில் வந்தபொழுது அவனை அவனாலேயே நம்ப முடியவில்லை. கொஞ்சம் பேசியபின், சூபரின்டண்டன்ட் அவனை அவர் வீட்டுக்கு வரும்படி சொல்லியழைத்துச் சென்றார். அவர் மலையாளி. திருவனந்தபுரம் அவரூர். அங்கு சிற்றுண்டியின் பொழுது அவரின் மகள்தான் பரிமாறினாள். மிகவும் அழகாக கேரள லட்சணத்துடன் பொருந்தி இருந்தாள். ஆனாலும் அவனை அவள் கண்டுகொள்ளவேயில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறாளாம். அவர் அவனிடம் நன்றாக நட்பாக பேசினார். அவர் அவனை கெஸ்ட் ஹௌஸ் சென்று எல்லாவேலைகளையும் முடித்துக்கொண்டு அவர் வீட்டின் பின்புறமுள்ள க்ளப்புக்கு வரும்படி சொன்னார். முடித்துக்கொண்டு வந்தபொழுது, க்ளப்பில் ஒரு இண்டோர் ஷட்டில் கோர்ட் இருந்தது. அங்கு அந்தப்பெண், மேலும் சிலருடன் ஆடிக்கொண்டிருந்தாள். இன்னும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. அது அவன் உணர்வுகளுக்கு கிடைக்கப்பெற்ற மறியாதயல்ல என்பதுமட்டும் அவனை உருத்தியது. இப்பொழுது சூப்பரின்டெண்டன்ட் அவனுக்கு ஷட்டில் விளையாடத் தெரியுமாவென கேட்டார். அவன் தெரியும் என்றான். அவனுக்கும் ஒரு பேட்டை எடுத்துக் கொடுத்து விளையாட சொன்னார். அதற்குரிய ஷூ இல்லாததால் கொஞ்சம் தயங்கினான். ஆனாலும் அவளை கவரவேண்டியதிருந்ததால் கோர்ட்டினுள் இறங்கினான். ஒரு சர்வ் ஒரு ஷாட்தான் எல்லோரின் கவனமும் அவன்மேல் திரும்பியது. அங்கு எல்லொரும் ஷட்டிலை விளையாடப் படித்துக்கொண்டிருப்பவர்கள். அவன் டிஸ்ட்றிக்ட் ப்ளேயர். அந்தப்பெண் அவனுக்கு எதிரணி. ஒரே சர்வ் தொடரில் 15-0 என வெற்றி பெற்றனர். நேராக வந்து அவள் அவனின் கையைகுழுக்கினாள். அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு சந்தொஷமாய் பேசத் துவங்கிவிட்டாள் இப்பொழுது.  அடுத்த ஆட்டத்தில் அவனுடன் வந்து நின்றுகொண்டாள். ஏதோ பலவருஷங்கள் பழகினவள் போல நடந்துகொள்ளத் துவங்கினள். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. விருவிருப்பான ஆட்டம் இப்பொழுது. அவன் வித்தைகளையனைத்தையும் காட்டிக்கொண்டிருந்தான்.
அதற்குள் ஃபேக்டரி மேனேஜர் வந்தார். தேவையானவைகளை எல்லாம் எழுதி ஒரு ஆர்டர் தயார் செய்து, சாமான்கள் அனைத்தும் மிகமிக அவசரம் என்றும் அதனால்தான் அந்த ஆர்டர் அவனுக்குக் கிடைத்தது என்பதையும் விளக்கிச் சொன்னார். கிளம்பும்பொழுதும் அந்தப்பெண் அவனிடம் வலியவந்து கைகுழுக்கினாள். இன்னும் ஒருவாரம் அங்கு இருப்பதாகவும் பின் திருவனந்தபுரம் செல்வதகவும் சொன்னாள்.
இப்படியாக ஒரு பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கப்பெற்று ஊர் திரும்பினான். அவனின் அப்பா அதை விரும்பாமல் அவனை ஒரு போட்டியாளனாகக் கருதத் துவங்கிவிட்டார் இப்பொழுது. அவன் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. பின் அவனே செயலில் இறங்கினான். சென்னை சென்று எல்லா சாமான்களனைத்தையும் வாங்கிவரத் தீர்மானித்துக் கிளம்பினான்.
2 நாட்களில் எல்லா சாமான்களையும் ஏற்பாடு செய்து, கையோடு எடுத்துக்கொண்டு மாஞ்சோலைக்குக் கிளம்பினான், ஒரு காரில்.  ஃபேக்டரி மேனேஜருக்கு எல்லாமும் கிடைக்கப்பெற்றதில் மிகுந்த சந்தோஷம். எல்லொரும் அவர்களுள் அவனையும் ஒருவனாக நினைத்து நட்பாகப் பழகத்துவங்கினர். அவன் ஒரேநாளில் அந்த இடத்தின் நாயகனாக தென்பட்டான். இதைக் கேள்விப்பட்டதும் க்ரூப் மேனேஜர் அவனை, அவரைச்சந்திக்க வரச் சொல்லி ஆளனுப்பினார். சந்திப்பின்பொழுது, அவனை வரவேற்று கைகுழுக்கி அத்தனை சாமான்களும் கிடைக்கப்பெற்றதால்  வாழ்த்தினார். அந்த சாமாங்களுக்காக ஏறத்தாழ 45 நாட்கள் காத்திருந்திருக்கின்றார்கள் என்பது அவனுக்குத் தெரியவந்தது. வெளியே சூப்பரின்டெண்டன்ட் அவனுக்காக காத்திருந்தார். 3 வருடங்களுக்கு எஸ்டேட்டுக்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் அவனே சப்ளை செய்யும் காண்ட்றாக்ட் ஒரு ஆர்டர் ஒன்று எழுதப்பட்டு அவனிடம் கொடுக்கப்பட்டது. அனுப்பிய சாமான்களுக்கும் உரிய பில்களை உடனேயே பாஸ் செய்து செக் கொடுத்தனர். எல்லொரும் அவனை வாழ்த்தினார்கள். ஆனால் அவன், அவளை சந்திக்க முடியாத வருத்தத்திலேயே அன்று கிளம்பினான்.



No comments:

Post a Comment