Sunday 2 June 2013

சிதைந்த 1984

அவனின் அம்மா அவனை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவனின் காதல் தோல்வியில் முடிந்ததால் அவனின் தாய் மிகுந்த ஜோசிய நம்பிக்கையால் உந்தப்பட்டு, ஒரு ஜோசியரிடம் அவனின் ஜாதஹத்தை கொண்டு சென்று காண்பித்திருக்கிறார். அவர் இந்த வருடம் அவனுக்குத் திருமணம் முடியாவிடில் இன்னும் 5 வருடங்கள் ஆகும், அல்லது ஆகாமலும் போகலாம், அவரின் திருமணம் முடிய, என்று ஒரு பெரிய குண்டைக் கொளுத்தி போட்டார். (ஒருவேளை 5 வருடங்கள் காத்திருந்திருந்தால் உன்னைத் திருமணமே செய்துகொண்டிருப்பேனோ என்னவோ?) மொத்த குடும்பமும் இப்பொழுது கவலை கொண்டது. அவனை பார்க்கும்பொழுது ஏதோ ஒரு விஷேச ஜந்துவைப்போல் பார்த்துச் சென்றனர். அவனைக் காணும்வேளைகளெல்லாம் அவன் தாய் அவனின் திருமண முடிவையே கேட்டுக்கொண்டிருந்தாள். அதுவே அவனுக்குப் பெரும் தலைவலியாகிப்போனது. ஒருவழியாக, வீடு கட்டினபின்தான் எல்லாமும், அதன்பின் பெண் பாருங்கள் என்று சொல்லினின்றான். அவர்களால் வீடு கட்டிமுடிக்க இயலாது என்ற நம்பிக்கையில் அப்படிச் சொல்லியிருந்தான். ஆனால் நடப்பது? சரசரவென 6 மாதத்தில் வீட்டையும் கட்டிமுடித்துவிட்டார்கள். இந்த இடத்தில் இறைவங்கூட அவனுக்கு உதவவில்லை.
திருமணத்திற்கு அவனுடைய கண்டிஷங்கள்:
1.       எத்தனை போட்டொக்கள் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுங்கள், ஆனால் பெண்ணை நேரில் சென்று பார்த்தபின்னர் பெண் பிடிக்கவில்லையென சொல்லக்கூடாது.
2.       வரதட்சனை எதுவும் வற்புருத்தக்கூடாது.  
3.       எந்த நிறமானாலும் எனக்கு பரவாயில்லை. (ஆனால் எனக்கு உன்போல மாநிறமான பெண்தான் பிடிக்கும், அதை நான் சொல்லவில்லை.)

இப்படியாக அவனின் திருமணம் நடந்து முடிந்தது. குடும்பத்தில் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்தான் அவனொருவனைத்தவிர. திருமணத்திற்கு அவனின் பழைய காதலியும் வந்திருந்தாள். அவள் முகத்தில் ஒரு ஓரத்தில் வருத்தம் மறைந்திருந்தது தெரிந்தது, அவனுக்கு கொஞ்சம் கவலையைத் தந்தது. ஆனாலும் எல்லாமும் முடிந்தது. 1984 ஆம் வருடமும் முடிந்தது. வாழ்க்கைப் பாதையும் தடம்புரண்டது, மாறிப்போனது. அதுவரையிலும் ஆணுக்கும் கற்பு அவசியம் என்பதில் தீவிரமாக இருந்ததுவும் தகரத் துவங்கியது.

No comments:

Post a Comment